காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் காதலர்கள் தங்களுக்குள் பரிசு பொருட்களை பகிர்ந்து கொள்வது வழக்கம். குறிப்பாக ரோஜா பூக்களை காதலர்கள் தங்கள் காதலிகளுக்கு கொடுத்து அழகு பார்ப்பார்கள். ரோஜா பூக்களை அன்பின் வெளிப்பாடாக பார்க்கின்றனர். இதனால் சாதாரண நாட்களை விட காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்கள் தேவை அதிகரித்து விலையும் அதிகரித்து வருகிறது.
பொதுவாக பெங்களூர் ஓசூர் ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இருந்து ரோஜாக்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இன்று (செவ்வாய்க்கிழமை) பெங்களூர், ஓசூரில் இருந்து ஈரோட்டுக்கு ரோஜா பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. மஞ்சள், சிகப்பு, பேபி பிங்க், டார்க் பிங்க், வெள்ளை ஆரஞ்சு போன்ற கலர்களில் ரோஜா பூக்கள் இருக்கும். 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டாக பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
கடந்த வாரம் 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.180 வரை விற்பனையானது. தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனையாகி வருகிறது. பொதுவாக ஈரோடு மார்க்கெட்டிற்கு 2,000 முதல் 2,500 கட்டுகள் வரை ரோஜா பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் இன்று 4,000 கட்டுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. சில்லரை விலையில் ஒரு ரோஜா ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாளை காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
0 coment rios: