ஈரோட்டில் பாரம்பரிய மிக்க நாட்டு மாடுகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திமில்-24 என்ற கால்நடை கண்காட்சி ஏஇடி பள்ளி வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
ஈரோடு நாட்டு மாடுகள் பாதுகாப்பு குழு மற்றும் ஆதிவனம் அமைப்பு சார்பில் "திமில்- 24" என்ற கால்நடை கண்காட்சி ஈரோடு ஏஇடி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கால்நடை கண்காட்சியில் காங்கயம், பர்கூர் புலிக்குளம், உம்பளச்சேரி, ஆலம்பாடி, தஞ்சாவூர் குட்டை இனம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.
இந்த போட்டியில் பங்கேற்ற மாடுகளின் கொம்புகள், பல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு அழகான மாடுகள் தேர்வு செய்யப்பட்டன. பல்வேறு பிரிவுகளில் போட்டியில் பங்கேற்ற மாடுகளுக்கு ரூபாய் ஆயிரம் முதல் பத்தாயிரம் வரையிலும் பரிசு தொகை வழங்கப்பட்டன. பரிசு பெறாத மற்ற மாடுகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. கண்காட்சியை திரைப்பட நடிகர் ரஞ்சித் தொடங்கி வைத்தார்.
ஈரோடு நாட்டு மாடு பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹரிணி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பெரியசாமி, கீழ்பவானி பாசன சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராமசாமி, ஏ இ டி பள்ளி தாளாளர் மோகன் கலந்து கொண்டனர்.நேற்று மாலையில் நடந்த நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.
ஆவின் மூலமாக நாட்டு மாட்டு பால் விற்பனை செய்ய சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் ஈரோட்டில் நடந்த காங்கேயம் மாடுகள் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுகளை வழங்கி முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அழிந்து வரும் நாட்டு ரக மாடுகளின் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் அருகே பெத்தாம்பாளையத்தில் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் கட்டப்பட்டு தற்போது இயங்கி வருகிறது.
நாட்டு ரக மாடுகளின் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் நாட்டு மாட்டுப்பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும். குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் நல்ல சத்தான மாட்டுப்பால் வழங்கும் வகையில் நாட்டு மாட்டு பால் ஆன ஏ 2 பால் ரகங்களை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்து அதனை ஆவின் நிறுவனத்தின் உதவியுடன் விற்பனை செய்ய அரசு முன் வர வேண்டும். இதுகுறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நான் குரல் எழுப்புவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ராமசாமி, கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம் எல் ஏ தென்னரசு, துணை மேயர் கே சி பழனிசாமி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பெரியசாமி, நாட்டு மாட்டு மாடுகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ஹரிணி, ஆதிவனம் அமைப்பின் தலைவர் டாக்டர் ரகுநாத்,. நிர்வாகிகள் அருண், சேது மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: