சனி, 3 பிப்ரவரி, 2024

அரசியலுக்கு வருபவர்கள் இதுபோன்று தெரிவிப்பது இயற்கை: அமைச்சர் முத்துசாமி

பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் உள்ள அண்ணாவின் முழுவுருவ வெண்கல சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் குமார் முருகேஷ், மாநகர செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் , செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:- 

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் மீதமுள்ள பத்து சதவீத பணி முடிக்காமல் இருந்தது ஒப்பந்தக்காரர்களின் தவறு. ஆட்சியர் தினமும் ஆய்வு செய்கின்றனர். இப்படி தெரிவிப்பது வருத்ததிற்கு உரிய விஷயம். கமிஷனுக்காக அத்திக்கடவு - அவினாசி திட்டம் முழுமையடையவில்லை என்று கருப்பண்ணன் தெரிவித்திருப்பது அநியாயமான குற்றச்சாட்டு. டாஸ்மாக் கடைகளில் அரசு விதித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை இன்று அனுப்பப்பட்டுள்ளது.

மதுபானங்களின் விலை உயர்வு குறித்த கேள்விக்கு பிறகு பேசுகிறேன் என பதிலளித்தார். மதுக்கடைகள் குறைப்பதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. டி.ஆர்.பாலு மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோரின் மதுக்கள் 44 விழுக்காடு பெறப்படுகிறது என அண்ணாமலை குற்றச்சாட்டுவது தவறானது. தேவையென்றால் பட்டியல் வெளியிடுவோம். நடிகர் விஜய் நிர்வாக சீர்கேடு இருப்பது குறித்து தெரிவித்திருப்பது அரசியலுக்கு வருபவர்கள் இதுபோன்று தெரிவிப்பது இயற்கை. அவர் முழு அரசியலில் பண்ணும் போது அதற்கான பதிலை சொல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், திமுக மாநில நிர்வாகிகள் கந்தசாமி, சச்சிதானந்தம், சந்திரக்குமார், பிரகாஷ், வீரமணி ஜெயகுமார், மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், செல்லப்பொன்னி, சின்னையன், பழனிசாமி, பகுதி செயலாளர்கள் வில்லரசம்பட்டி முருகேஷ், அக்னி சந்துரு, ராமச்சந்திரன், நடராஜன், தண்டபாணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: