புதன், 28 பிப்ரவரி, 2024

ஈரோட்டில் அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் தொடர்பாக விவசாயிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமை வகித்தார்.

கூட்டத்தில், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- அத்திக்கடவு -அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரி நீரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 நீர்வளத்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் (மொத்தம் 1045 எண்கள்) நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு அவிநாசி நீரேற்று திட்டத்தில் நிலத்தடி குழாய் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. திட்டப் பணிகள் 99 சதவீதம் முடிவுற்று, 1045 குளம் குட்டைகளுக்கு நிலத்தடி குழாயின் மூலம் தண்ணீர் கொண்டு சென்று சோதனை ஓட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு இதுவரை ரூ.1747.44 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பவானி ஆற்றில் உபரி நீர் வரத்து 218 கன அடியாக உள்ளது.

இத்திட்டமானது 250 கன அடி நீரினை கொண்டு 1045 குளங்களுக்கும் ஒரே நேரத்தில் நீர் வழங்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பவானி ஆற்றில் உபரி நீர் 400 கன அடிக்கு மேல் கிடைக்க பெறும் பொழுது அனைத்து நீரேற்று பம்புகள் இயக்க இயலும். தற்பொழுது 160 கன அடி நீர் வரத்து உள்ளதால், உபரி நீர் 400 கன அடிக்கு மேல் கிடைக்க பெறும் பொழுது தமிழ்நாடு முதலமைச்சரால் இத்திட்டம் துவக்கி வைக்கப்படும். 

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், கண்காணிப்பு பொறியாளர் திருமலை குமார், செயற்பொறியாளர் சுப்பிரமணியன் (பெருந்துறை), செயற்பொறியாளர் நரேந்திரன் (அவிநாசி), உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் எல்.என்.டி. நிறுவனத்தினர் மற்றும் அத்திக்கடவு - அவிநாசி திட்ட விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: