வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற திமுகவினர் தூதுவர்களாக மாற வேண்டும்: அன்பில் மகேஷ்

ஈரோடு அடுத்த 46புதூர் அருகே உள்ள ஆனைக்கல்பாளையத்தில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் தலைமை வகித்தார். வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அமைச்சர் முத்துசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். 

இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு நாம் அனைவரும் பாடம் புகட்ட வேண்டும். பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் நம்மை கண்டு பயப்படுகின்றனர். அவர்களால் நேரடியாக நம்மை எதிர் கொள்ள முடியாமல் அமலாக்க துறை மூலம் எதிர்கொண்டு வருகின்றனர்.  

தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி. ஆனால் திமுகவினர் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். இந்தியாவில் எங்கு பிரச்சனைகள் தோன்றினாலும் அதற்கு முதல் குரல் எழுப்புவது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான். டெல்லியில் தங்களது உரிமைக்காக வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் போராடுகின்றனர். அவர்களை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல், மோடி வெளிநாடுகளுக்கு சென்று கோயில்களை திறப்பதுமாக உள்ளார்.   

திமுகவினர் ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. மோடி அவர்கள் கோவில் கோவிலாக சுற்றுகிறார். ஆனால் விவசாயிகளின் பேச்சை கேட்பதில்லை, அவர்களை அழைத்துப் பேசுவதும் இல்லை. ஆனால் தற்சமயத்தில் அபுதாவில் கூட கோயிலை திறந்து வைத்து உரையாற்றுகிறார். கார்ப்பரேட் நிறுவனத்திற்கு கடன் தள்ளுபடி செய்யும் பாஜக அரசு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய முன் வருவதில்லை. தமிழகத்தில் கலைஞர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால் பெண்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.  

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் 16 லட்சம் பேர் காலை உணவு திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இலவச கட்டணமில்லா பேருந்து ஏற்படுத்தியது தமிழக அரசு. இதன்மூலம் பல பெண்கள் தங்கள் வருமானத்தை சேமிக்கின்றனர். தமிழகத்தில் பெண்களுக்கான வளர்ச்சி திட்டத்தை மு க ஸ்டாலின் அவர்கள் நல்ல திட்டத்துடன் அறிமுகப்படுத்தி அவர்களின் குடும்பத்தை மேன்மைப்படுத்தி வருகிறார்.  

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 13000 பேர் மீண்டும் கல்வி பயில தொடங்கியதுடன் மாதந்தோறும் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் கிடைக்கிறது. மக்களை தேடி மருத்துவம் மூலம் 2 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர் . இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு திமுக அரசு இலவச மின் இணைப்பு வழங்கி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின் அதன் அடிமைகள் பாஜகவிடம் தங்களது கொள்கைகளை அடகு வைத்து விட்டனர்.  

தமிழகத்தில் நீட் தேர்வு ஒழிக்க வேண்டும் என அனிதா என்ற பெண் இறந்தது முதல் ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் இறக்கும் வரை இன்றும் குரல் கொடுத்து வருகிறோம். நீட் தேர்வை ஒழிக்க 85 லட்சம் பேரிடம் கையெழுத்துகளை பெற்றோம். ஆனால் தமிழகத்தில் தான் நீட்டுக்கு எதிராக போராடி வருகிறோம். பல உயிர்களையும் எழுந்துள்ளோம். தமிழகத்தில் தான் ஏராளமான மருத்துவக் கல்லூரி உள்ளது.  

தமிழகத்தில் தான் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. திமுக அரசு தொடர்ந்து நீட் தேர்வை எதிர்க்கும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொருவரும் தூதுவர்களாக மாற வேண்டும். திமுக அரசின் நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்தியாவில் தமிழகம் கல்வியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 14 ஆம் இடத்தில் இருந்த தொழில் முதலீட்டில் தற்பொழுது மூன்றாம் இடத்திற்கு தொழில் முதலீடு முன்னேறி உள்ளது.

இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதுதான் திமுகவின் அரசு. தமிழகத்தைக் கண்டு மற்ற மாநிலங்களில் திராவிட மாடல் ஆட்சியை பலர் ஏற்படுத்தி வருகின்றனர். ஒவ்வொருவரும் நேற்று முன்தினம் சட்டசபையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 26 நிமிட உரையை நாம் படித்தாலே தமிழகம் மட்டுமல்ல நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.  

தமிழகத்தில் என்னென்ன திட்டங்கள் பொதுமக்களுக்கு திமுக அரசு செய்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரியும் சேர்த்து 40க்கு 40 என்ற கொள்கையுடன் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக நாம் அனைவரும் தூதுவர்களாக மாறி திமுக அரசின் நலத்திட்டப் பணிகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், சாமிநாதன், மாநில நிர்வாகி குறிஞ்சி சிவக்குமார், மாநில இளைஞரணி துணைத் தலைவர் கே.இ பிரகாஷ், மாவட்ட மாணவர் அணி தலைவர் திருவாசகம், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன், ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி தொகுதி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் தாராபுரம் தொகுதி திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: