தை அமாவாசையை முன்னிட்டு இன்று காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதிகள் சங்கமிக்கும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து காவிரியில் புனிதநீராடி வழிபாடு நடத்தினர். அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கூடுதுறை வளாகத்தில் தற்காலிக பரிகார மண்டபங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
காவிரியில் அதிக அளவில் தண்ணீர் ஓடுவதால், பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்கும் வகையில் தீயணைப்பு துறையினர் மீட்பு உபகரணங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் எள், தண்ணீர் வைத்து தர்ப்பணம் செய்த பிறகு அதை காவிரியில் விட்டு நீராடினர். இவ்வாறு செய்வதால் தங்களின் முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைவதோடு, அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
உள்ளூர் மற்றும் வெளியூர் சேர்ந்த ஏராளமானோர் வாகனங்களில் திரண்டு வந்ததால், வாகனம் நிறுத்துமிடம் நிரம்பி காணப்பட்டது. மேலும், பல்வேறு தோஷ நிவர்த்தி பரிகார வழிபாடுகளும் நடத்தப்பட்டது. பவானி இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
0 coment rios: