கோவை மண்டலத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் ஆடவர் மற்றும் மகளிர் பயிற்சியாளர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு சார்பில் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாக மைதானத்தில் இன்று (27.02.2024) முதல் (29.02.2024) வரை ஆடவருக்கும், (01.03.2024) அன்று மகளிருக்கும் நடைபெறுகிறது.
இதில் கால்பந்து, கைபுந்துப்பந்து, வலைப்பந்து, பூப்பந்து போட்டிகள் 100, 200, 400, 800, 1500 ஓட்டப்பந்தையம், 4x100 தொடர் ஓட்டம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற விளையாட்டுப்பொட்டிகள் நடைபெறுகின்றன. மேலும், வரும் மார்ச் 1ம் தேதி வெற்றி பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பரிசளிப்பும் நிறைவு விழாவும் நடைபெறவுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், ஆகிய மாவட்டங்களிலிருந்து 12 அரசு மற்றும் 32 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களிலிருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் கோவை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். மேலும், தேசிய கொடியை ஏற்றி, விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, விளையாட்டு ஜோதியை ஏற்றிவைத்து, விளையாட்டு வீரர்களுக்கு சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் விதமாக சமாதானப்புறாவை பறக்குவிட்டு விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மண்டல பயிற்சி இணை இயக்குநர் முஸ்தபா, ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்வராஜ், நிர்வாக அலுவலர் ஜீவா, பணியமர்த்தும் அலுவலர் சீனிவாசன், மண்டலத்திலுள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர்கள், முதல்வர்கள், பயிற்சி அலுவலர்கள், அலுவலர்கள், உடற்கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: