ஸ்டாலின் முதல்வரானது ஒரு அரசியல் விபத்து என்று முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பவானி தேர் வீதியில் நடைபெற்றது. பவானி நகர செயலாளர் எம்.சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். பவானி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் .தங்கவேல் வரவேற்று பேசினார்.
பவானி ஒன்றிய விவசாய அணி செயலாளர் .கணேசன், பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் .ஜெகதீசன், அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் மேகநாதன், முனியப்பன், மாவட்ட கவுன்சிலரும் பவானி வடக்கு ஒன்றிய பேரவை செயலாளருமான .விஸ்வநாதன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்.தட்சிணாமூர்த்தி, பவானி ஊராட்சி ஒன்றிய குழு தலைவி பூங்கோதை வரதராஜ், பவானி முன்னாள் நகர மன்ற தலைவர் (பொறுப்பு) ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருருமான கே.சி.கருப்பண்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஸ்டாலின் முதல்வரானது ஒரு அரசியல் விபத்து. முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் வீட்டு வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு, காலிமனை வரி உயர்வு செய்து பொதுமக்களின் வயிற்றில் அடித்துள்ளார் ஸ்டாலின். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அரிசி விலை, மளிகை பொருட்கள் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சிறப்பான ஆட்சியை செய்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று நான்காண்டு காலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை செய்து வந்தார்.
எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கொண்டு வந்து 90 சதவீதம் பணிகள் முடிவுற்று இருந்தது. தொடர்ந்து அண்ணா திமுக ஆட்சி தொடர்ந்து இருந்தால் அத்திக்கடவு அவினாசி திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கும். ஆட்சி மாற்றத்தின் காரணமாக, தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் ஆகியும் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. இதனால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மிகவும் வேதனையில் உள்ளார்கள்.
திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. பவானி சட்டமன்ற தொகுதியில் அண்ணா திமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் நடைபெற்று உள்ளது. திமுக ஆட்சியில் எந்தவித திட்ட பணிகளும் நடைபெறவில்லை. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அண்ணா திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும். அதற்காக அண்ணா திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் இரவு பகல் பாராது வீடு வீடாகச் சென்று அண்ணா திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எடுத்துக் கூறி திண்ணைப் பிரச்சாரமாக செய்ய வேண்டும். 2026 ஆம் ஆண்டு அண்ணா திமுக மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்பார். அப்போது திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் அண்ணா திமுக ஆட்சியில் கொண்டுவரப்படும் என அவர் பேசினார்.
கூட்டத்தின் முடிவில், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட பாசறை மாவட்டச் செயலாளர் பூக்கடை பிரகாஷ் அர்ஜுன் நன்றி கூறினார்.
0 coment rios: