ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகம் தலைமையில் மாவட்ட முழுவதும் மதுவிலக்கு போலீசார் மற்றும் போலீசார் ஒன்றிணைந்து போலி மதுபானங்கள் விற்பனையை தடுக்க தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ஈரோடு பச்சப்பாளி பகுதியில் நின்று கொண்டு மது விற்ற, 46புதூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 202 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல், ஈரோடு சோலார் புதூர் பகுதியில் உதவி காவல் ஆய்வாளர் புவனேஸ்வரன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது விற்ற தஞ்சாவூர் மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 68 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, இருவரிடமும் மொத்தம் 270 போலி மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். மேலும், கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்கள் போலி மதுபாட்டில் என தெரிய வந்துள்ளதால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
0 coment rios: