ஈரோட்டில் இந்தியா கூட்டணியின் செயல்வீரர்கள் மற்றும் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோடு மேட்டுக்கடையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், மதிமுக சார்பில் எம்.பி.கணேசமூர்த்தி, சிபிஎம் சார்பில் மாவட்டத் தலைவர் மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பிரபாகரன், விடுதலை சிறுத்தைகள் சார்பில் சாதிக், காங்கிரஸ் சார்பில் குப்பண்ண சந்துரு, விஜய் கண்ணன் முன்னிலை வகித்தனர்.
காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தற்போதைய பிரதமர் சர்வாதிகாரியாக உருவெடுப்பார். இது நாட்டின் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல மக்களுக்கும் கேடாகவே முடியும். திமுக வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கே.இ.பிரகாஷ், திமுக பாரம்பரியமிக்கவர். இவர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றால் மக்களுக்கு வேண்டிய நலத்திட்டங்களை கட்டாயம் பேசுவார். எனவே இத்தொகுதியில் அவரை வெற்றி பெறச்செய்து அமைச்சர் சு.முத்துசாமி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
ஈரோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை அறிமுகம் செய்து வைத்து அமைச்சர் முத்துசாமி பேசியது, ஈரோடு தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்று அதனை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அர்ப்பணிப்போம். இந்த தொகுதியின் வெற்றிக்காக கூட்டணி கட்சிகள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை கடந்த ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நிரூபித்து இருக்கிறது. மக்களின் மனதில் உதயசூரியன் சின்னம் தான் இருக்கிறது. இந்த தேர்தல் வெற்றி மிக முக்கியமானது. தமிழக மக்களுக்காக எந்த உதவியும் செய்து தர மத்திய அரசு முன் வருவதில்லை.
தமிழக அரசின் சாதனை திட்டங்களை வீடு வீடாகச் சென்று மக்களுக்கு எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும். இந்த தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கான முக்கியமான தேர்தல் ஆகும். எனவே திமுகவினர் தோழமைக் கட்சியினருடன் அனுசரித்து தேர்தல் களப்பணியாற்றி பெரும் வெற்றியை ஈட்டித் தர வேண்டும். வரும் 31ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரோடு வருகை தர இருக்கிறார். கரூர் ரோட்டில் ஈரோடு, நாமக்கல், கரூர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வார். வரும் 25ம் தேதி திமுக வேட்பாளர் பிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்வார்". இவ்வாறு அமைச்சர் முத்துசாமி பேசினார்.
கூட்டத்தில் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகர் திமுக பகுதி செயலாளர்கள் அக்னி சந்துரு, ராமச்சந்திரன், வில்லரசம்பட்டி முருகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: