ஞாயிறு, 17 மார்ச், 2024

நாடாளுமன்றத் தேர்தல் 2024: ஈரோடு மாவட்டத்தில் 144 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

நாடாளுமன்றத் தோ்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 144 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

தேர்தல் அறிவிப்பு:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று (சனிக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும். ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல்:-

அதன்படி, வருகிற 20ம் தேதி (புதன்கிழமை) முதல் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. அன்றைய தினத்தில் இருந்து வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன்மொழிபவர்கள் ஒருவர் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான என்னிடமோ அல்லது முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ஈரோடு வருவாய் கோட்டாட்சியரிடமோ (அரசு விடுமுறையில்லாத) தினத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மேலும், ஞாயிற்றுக்கிழமை, 2வது மற்றும் 4வது சனிக்கிழமை வேட்பு மனுக்கள் பெறப்படாது.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 27ம் தேதி ஆகும். வேட்பு மனு பரிசீலனை 28ம் தேதி காலை 11 மணிக்கு ஆய்வு எடுத்து கொள்ளப்படும். வேட்பு மனு வாபஸ் பெற, வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன் மொழிபவர்களில் ஒருவர் அல்லது வேட்பாளரால் எழுத்து மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள நபர் தேர்தல் முகவர் வேட்பாளரின் விலகல் அறிவிப்பை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 30ம் தேதி மாலை 3 மணிக்குள் வழங்க வேண்டும்.

வாக்குப்பதிவு/ வாக்கு எண்ணிக்கை:-

தேர்தல் வாக்குப்பதிவானது வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடை பெறும். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி வாக்கு எண்ணிக்கையானது ஜூன் மாதம் 4ம் தேதி ஈரோடு அடுத்த சித்தோடு அருகே உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

வாக்குச்சாவடி/ வாக்காளர் பட்டியல்:-

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 19 லட்சத்து 54 ஆயிரத்து 712 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். இவர் கள் வாக்களிக்க ஏதுவாக 2,222 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளவும், புகார்கள் அளிக்கவும் ஆட்சியர் அலுவலக தொடர்பு மையத்தினை 24 மணி நேரமும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், இணையதளம் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலரிடமும் படிவம் 6 வழங்கி பெயர் சேர்க்கலாம். வாக்காளர் பட்டியலில் நீக்கல் மற்றும் திருத்தம் படிவங்களான 7 மற்றும் 8 ஆகியவை தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து பெறப்படமாட்டாது.

ஈரோடு தொகுதி:-

ஈரோடு மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. அதில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு ஈரோடு கிழக்கு ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கியுள்ளது. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளிலும் மொத்தம் 15 லட்சத்து 28 ஆயிரத்து 426 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 1,688 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் தொகுதி:-

இது தவிர, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, அந்தியூர், கோபி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியையும், பவானிசாகர்(தனி தொகுதி) நீலகிரி நாடாளுமன்ற தொகுதியையும் உள்ளடக்கியுள்ளது.

144 கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு:-

தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான சுவர் விளம்பரங்களை அழிப்பது, குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுத்து செல்வது. தேர்தல் செலவினங்கள் மற்றும் இதர விதி மீறல்களை கண்காணிக்க 25 பறக்கும் படை, 24 நிலையான கண்காணிப்பு குழு, 8 வீடியோ கண்காணிப்பு குழு, வீடியோ பார்க்கும் குழு, 8 கணக்குகள் தணிக்கை குழு அமைக்கப் பட்டு, ஒவ்வொரு சட்டமன்ற வாரி யாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.

பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களில் ஒரு நிர்வாக நடுவர் நிலையிலான ஒரு அலுவலரும், போலீஸ் எஸ்ஐ மற்றும் 3 போலீசார், ஒரு வீடியோ கிராபர் இருப்பர். இவர்கள் 24 மணி நேரமும் 8 மணி ஷிப்ட் முறையில் செயல்படுவர். இதன்பேரில், 144 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மட்டும் ஒரு பறக்கும் படை கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி கள் தொடர்பாக கண்காணிப்பு பணியில் மொத்தம் 725 அலுவலர் கள் மற்றும் பணியாளர்கள் நேர டியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்ல ஆவணம் தேவை.

ஈரோடு மாவட்டம் அதிக வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால், வணிகர்கள் தங்களது தொழில் தொடர்பாக ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கத்தை கொண்டு செல்லும் போது உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பறி முதல் செய்து, கணக்கு தணிக்கை குழுவில் ஒப்படைக்கப்படும்.

கட்டுப்பாட்டு அறை:-

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு தேர்தல் தொடர்பான பதிவு செய்ய 1800 425 0424 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 0424- 2267672, 2267674, 2267675,2267679 ஆகிய தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்க லாம். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலிகளான eVIGIL செயலி மூலம் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் மற்றும் தேர்தல் செலவு விதி மீறல்கள் குறித்த புகார்கள் சம்பவ செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் பதிவு செய்யப்படுவதால், உடடினயாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இந்த செயலியில் ஜிஐஎஸ் என்ற மென்பொருள் பதிவு புகார்களின் உண்மை தன்மையினை கண்டறிந்து தொடர்பில்லாத புகார்களை ஆரம்பத்திலேயே கைவிடவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் மற்றும் ஒலி, ஒளி பரப்பப்படும் அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை கண்காணிப்பும் வகையில் தொலைக் காட்சி இணைப்புகளுடன் கூடிய மையம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் விளம்பரங்களை அச்சிடுவதற்கு முன் இக்குழுவிடம் தணிக்கை சான்றி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: