அந்தியூர் சங்கராபாளையம் ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து பவானி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் ஊராட்சித் தலைவர் சின்னத்தங்கம் (எ) ராதாகிருஷ்ணன் (48). கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி மூலக்கடை - பர்கூர் சாலையில் உள்ள இருசக்கர வாகனம் பழுது நீக்க கடை முன்பு காரில் வந்த கும்பல் இவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.
இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார், அந்தியூர் சங்கராபாளையத்தைச் சேர்ந்த சேகர் மகன் அரவிந்த் (வயது 25) மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம், முத்துகுளத்தூர் காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் பாலா (எ) பாலமுருகன் (வயது 30), மதுரை, மாதப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சூர்யா (எ) முத்துமாரி (வயது 25), மதுரை கரிமேட்டைச் சேர்ந்த முனியாண்டி மகன் சிவா (எ) மிட்டாய் சிவா (வயது 24), மதுரை பிபி குளம், நேதாஜி சாலையைச் சேர்ந்த பாண்டிகுமார் மகன் சரவணன் (எ) காளி (வயது 25), சென்னை, அண்ணா நகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கமலக்கண்ணன் மகன் ராஜேஷ் (எ) சதீஷ்குமார் (வயது 27) மற்றும் அந்தியூர் எண்ணமங்கலம் செல்லம்பாளையத்தைச் சேர்ந்த கருப்பு செட்டியார் மகன் அபிமன்னன் (வயது 64), அந்தியூர் மூலக்கடையைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரபாகரன் (வயது 42) உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை பவானி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில், கடந்த 2013ம் ஆண்டு அந்தியூர் மூலக்கடையை சேர்ந்த சேகர் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், கொலையான சேகரின் மகன் அரவிந்த், தனது தந்தையின் கொலைக்கு பழி வாங்க கூலிப்படையைக் கொண்டு ராதாகிருஷ்ணனைக் கொலை செய்தது பழிக்கு பழி என விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், பவானி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தயாநிதி முன்பாக விசாரணைக்கு வந்தது. கூலிப்படையை சேர்ந்த பாலமுருகன், சூர்யா (எ) முத்துமாரி, சிவா (எ) மிட்டாய் சிவா, சரவணன் (எ) காளி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அந்தியூர் அரவிந்த், ராஜேஷ் (எ) சதீஷ்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதத் தொகை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில், அந்தியூர் அபிமன்னன், பிரபாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்ட 6 பேரும் கோயமுத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
0 coment rios: