ஞாயிறு, 31 மார்ச், 2024

செய்யவும் மாட்டோம்; செய்தாலும் தடுப்போம் என்பது அதிமுக, பாஜக பாணி- ஸ்டாலின் பேச்சு..!

எதுவும் செய்ய மாட்டோம்: யாரு செய்தாலும் தடுப்போம் என்பது அதிமுக - பாஜக பாணி என்று ஈரோடு தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷ், நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன், கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது:- 

பெரியார் பிறந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன். நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கருணாநிதியின் குருகுலத்துக்கு வந்திருக்கிறேன். இந்த மண்ணுக்குத்தான் எத்தகைய பெருமைகள். வெள்ளையனை எதிர்த்து போராடிய தீரன் சின்னமலையின் மண் இது. தமிழர் என்றொரு இனம் உண்டு. தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்று பாடிய நாமக்கல் கவிஞரின் மண். சேர மன்னர்களின் தலைநகராக இருந்த மண் என்று ஈரோடு, நாமக்கல், கரூர் மண்ணுக்கு தனிப்பெருமை உண்டு. இந்த மண்ணில் பிறந்த உங்களை நாடு காக்கும் போருக்கு ஜனநாயகத்தை காக்கும் போருக்கு அழைப்பு விடுப்பதற்காக நான் வந்திருக்கிறேன்.


இங்கே கூடி இருக்கிற உங்கள் எழுச்சியை பார்க்கிறபோது இந்த 3 பேரும் பல லட்சம் ஒட்டு கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்பது தெரிகிறது. இவர்களை வெற்றி பெற வைக்க தயாரா? (முதலமைச்சர் கேட்க, பொதுமக்கள் தயார் என்று கூறினார்கள். 1021-ம் ஆண்டு அதிமுக என்ற இருண்ட கால ஆட்சியை அகற்றி. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்த அரசை அகற்றி தொழில்களை பின்னுக்கு தள்ளிய அரசை அகற்றி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை பின்னுக்கு தள்ளிய அரசை அகற்றி என் மீது நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பை நீங்கள் கொடுத்தீர்கள். அப்போது உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று யாராக இருந்தாலும் பாரபட்சம் காட்டாத ஆட்சியை வழங்கி வருகிறோம்.

நான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் நமது திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறேன். நல்லமனங்களில் இருந்து வரும் வாழ்த்துகள் போதும். இதுவே நமக்கு மகிழ்ச்சி. இதுவரை 1 கோடியே 15 லட்சம் பெண்கள் கலைஞரின் உரிமைத்தொகை பெற்று வருகிறார்கள். விடியல் பயணம் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப் பெண்கள் திட்டம், மாணவர்களுக்கான தமிழ்ப் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நான் முதல்வன் திட்டம் என்று நாள்தோறும் பல திட்டங்களை மக்களுக் கான திட்டங்களாக திமுக செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முழு முயற்சியோடு செயல்பட்டு வருகிறது நம் முடைய திராவிட மாடல் அரசு. தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல ஒவ்வொரு திட்டமாக வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறோம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுகவும், பாஜவும் மக்கள் நலத்திட்டங்களைத் தமிழ்நாட்டுக்கான திட்டங்களைக் குறை சொல்கிறார்கள். அது குறைகளாக இருந்தால் நிச்சயம் சரிசெய்யலாம்.

ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கிறது என்ற வயிற்றெரிச்சலில் அவதூறு செய்கிறார்கள். திமுக திட்டங்களைக் குறை சொல்வதாக நினைத்துக் கொண்டு பயனடையும் தமிழ்நாட்டு மக்களையே குறை சொல்கிறார் பாதம் தாங்கி பழனிசாமி. அவர் மட்டுமா, பாஜக என்ன சொல்கிறார்கள்? மகளிருக்குக் கிடைக்கும் உரிமைத் தொகையையும் வெள்ள நிவாரணத் தொகையையும் 'பிச்சை' என்று கேவலப்படுத்தியும் தமிழ்நாட்டுத் திட்டங்களுக்கு நிதி தராமலும் முட்டுக்கட்டை போடும் கட்சி பாஜ நம்மைப் பொறுத்தவரை, நம்முடைய முழக்கமே என்ன? "சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்".


அந்த கம்பீரத்துடன் தான், இந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின், என்னவெல்லாம் செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறோம். ஆனால், அதிமுக - பாஜக பாணி என்ன? எதுவும் செய்யவும் மாட்டோம்; யாரு செய்தாலும் தடுப்போம்". இதனால் தான், ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளில் 10 விழுக்காட்டைக் கூட நிறைவேற்ற வில்லை என்று 'பச்சைப் பொய்' பழனிசாமி பொய்ப் பிரச்சாரம் செய்கிறார். உலக அளவில் இந்திய ஜனநாயகத்திற்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் தேர்தல் பத்திர ஊழல்.

அதுமட்டுமா, சி.ஏ.ஜி அறிக்கையில் வந்ததே 7 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு. அதைப் பற்றி மத்திய அரசு, வாயே திறக்க வில்லையே. தேர்தல் பத்திரம் போன்றே மற்றொரு நிதியும் வசூல் செய்திருக்கிறார். அதுவும் 'பி.எம். கேர்ஸ் பண்ட்'என்ற பெயர் வைத்து வசூல் செய்திருக்கிறார். அது பற்றிய அத்தனை ரகசியங்களும் ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அம்பலமாகும். அப்போது மாட்டுவார்கள். யார் யார் கம்பி எண்ணுகிறார்கள் எனப் பார்ப்போம்.

இப்படி ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் எதுவுமே செய்யாத பிரதமர் மோடியும் மத்திய அரசும் இந்த மேற்கு மண்டலத்திற்குத் தாங்கள் ஏதோ சாதனைகளைச் செய்து விட்டதாக நினைத்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையில், தொழில்வளம் மிகுந்த இந்த மேற்கு மண்டலம் தான், பாஜகவின் இன்னல்களுக்கு அதிகமாக ஆளாகியிருக்கிறது. ஜனநாயகம்-நாடாளுமன்றம்- மாநில அரசுகள்- இடஒதுக்கீடு என்று அனைத்தையும் ஒழிக்க நினைக்கும் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் தொழில் துறையையே மொத்தமாக இழுத்து மூடிவிடுவார்கள்.

தொழில் வர்த்தகக் கட்டமைப்பையே சிதைத்து விடுவார்கள். அவருக்கு நெருக்கமான சிலர் மட்டுமே. தொழில் வர்த்தகம் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கி விடுவார்கள். எளிய மக்களின் உழைப்பில் வளர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எல்லாத்தையும் அழித்து விடுவார்கள். பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு இடு பொருட்கள் விலை உயர்வு சுங்கச்சாவடி கட்டணச் சுரண்டல் என்று இந்தப்பகுதியில் இருக்கும் விஷிவிணி நிறுவனங்கள் - ஜவுளித் தொழில் பேருந்து கூண்டு கட்டும் தொழில் கொசு வலை உற்பத்தித் தொழில் வரை அனைத்துமே பாதித்திருக்கிறது.


ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இந்த நிறுவனங்கள் நலிவடைந்ததால் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகமாகி விட்டது. உற்பத்தி நடவடிக்கைகள் இந்திய அளவில் குறைந்திருப்பதாக, புள்ளி விவரங்கள் சொல்கிறது. ஆர்டர்கள் கிடைக்காமல் மில்களை மூடும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. விசைத்தறிகளுக்கு சோலார் மின்தகடு அமைக்க மானியம் கிடைப்பதில்லை. விசைத்தறிகளைத் தரம் உயர்த்தவும் மானியம் கிடைப்பதில்லை. விஷிவிணிகளுக்கு முன்போன்று, கடனும் மானியமும் எளிதாகக் கிடைக்கிறதா? சிறு - குறு தனிநபர் நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு 30 விழுக்காடு வருமான வரி விதிக்கப்படுகிறது.

ஈரோட்டு மஞ்சள் பலருக்கும் வாழ்வாதார இருக்கிறது. மஞ்சளை உணவுப் பொருளாக மாற்றி விட்டால் ஜி.எஸ்.டி போட முடியாது என்று விவசாயிகளின் கோரிக்கையை பா.ஜ.க. அரசு புறக்கணிக்கிறது. இப்படிப்பட்ட ஊழல் ஆட்சியை நடத்தி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி ஊருக்கு உபதேசம் செய்யலாமா? பா.ஜ.க. டைரக்ஷனில் நடக்கும் அதிமுக, பாஜக கள்ளக் கூட்டணிக்கு, பாதம் தாங்கி பழனிசாமி புதியதாக ஒரு கதை சொல்லியிருக்கிறார். டயலாக் என்ன தெரியுமா? பாஜகவின் கூட்டணியில் இருந்ததால், விமர்சிக்க மாட்டாராம். என்ன ஒரு பதில் உண்மை அது இல்லை.

அவரால் ஒருபோதும் பிரதமர் மோடியையோ, அமித்ஷாவையோ, ஆளநரையோ ஏன் பாஜகவில் இருக்கும் யாரையும் விமர்சிக்க முடியாது. ஏன், என்றால் எஜமான விஸ்வாசம். பதவி சுகத்திற்காகவும் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் பாஜவின் அத்தனை மக்கள் விரோதத் திட்டங்களையும் ஆதரித்தவர் பழனிசாமி. ஆட்சியில் இருக்கும் போது வைத்த கூட்டணியை இப்போதும் ரகசியமாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார். இதற்குச் சுற்றிவளைத்து அவர் கண்டுபிடித்த காரணம் தான் கூட்டணி தர்மம்.

காலில் தவழ்ந்து சென்று முதலமைச்சர் பதவியை வாங்கிய, அம்மையார் சசிகலாவைப் பற்றி நீங்கள் பேசாத பேச்சா? இது என்ன மாதிரியான தர்மம்? கூடவே இருந்த தர்மயுத்தம் ஓபிஎஸ்க்குப் பொதுக்குஅழுவில் வாட்டர் பாட்டில் மரியாதை செய்தீர்களே. அது என்ன தர்மம்? இப்போது சமீபத்தில் கூட, உங்கள் கூட்டணியில் இருந்து சென்ற அய்யா ராமதாசை நீங்கள் விமர்சிக்கவில்லையா? இது என்ன கூட்டணி தர்மத்தில் வராதா? பாதம்தாங்கி பழனிசாமி உங்களால், ஒருபோதும் பாஜகவை விமர்சிக்க எதிர்க்க முடியாது. அதற்குத் துணிவு வேண்டும். முதுகெலும்பு வேண்டும். ஏன் என்றால், பழனிசாமியின் குடுமி பாஜ கையில் இருக்கிறது. என்ன குடுமி? ஊழல் குடுமி.

அதிமுகவின் ஊழல்கள் என்பது, கன்னித்தீவு கதை மாதிரி. அதில் பழனிசாமியின் அத்தியாயத்தை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், சம்பந்திக்கும் சம்பந்தியின் உறவினருக்கும் காண்ட்ராக்ட் கொடுத்துச் சாதனை செய்தவர் பழனிசாமி. சம்பந்திக்கு டெண்டர் கொடுப்பதில் என்ன தவறு என்று சொன்னவர் தான் பழனிசாமி. "யார் மேல்தான் ஊழல் புகார் இல்லை" என்ற எகத்தாளமாக டெல்லியில் பேட்டி கொடுத்தவர் பழனிசாமி. குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கும் அமைச்சரை வைத்து, ஆட்சி நடத்தியதும் பழனிசாமி தான். இன்றைக்கும் சிபிஐ நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இப்படி வாய்கிழிய ஊழலுக்கு வக்காலத்து வாங்கும் பழனிசாமிக்கு, திமுகவைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது.


12 ஆண்டு காலம் குஜராத் முதலமைச்சராக இருந்து, மாநில உரிமைகளைப் பேசிய மோடி. டெல்லிக்கு சென்று பிரதமரானதும், மாநிலங்களை அழிக்கத் துடியாக துடிக்கிறார். மாநிலங்களுக்கு என்று எந்த அதிகாரங்களும் இருக்கக் கூடாது; மொத்த அதிகாரமும் தன்னுடைய பாக்கெட் டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சர்வாதிகாரியைப் போல் நினைக்கிறார். பிரதமர் மோடி அவர்களே... நீங்கள் எஜமானர் அல்ல. மக்கள் தான் உங்களுக்கு எஜமானர்கள். அதை மறந்துவிடாதீர்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக் கூடாததை எல்லாம் செய்கிறார். ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்தார்கள். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வெளியில் இருந்தால் தேர்தலில் வலிமையாக பணியாற்றுவார்கள் என்று பயந்து நடுங்கிக் கைது செய்திருக்கிறார்கள். இங்கு தமிழ்நாட்டிலும் -மேற்கு மண்டலத்தின் வலிமையான செயல்வீரர் செந்தில் பாலாஜியையும் இதே மாதிரிதான் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். சுதந்திரமான புலனாய்வு அமைப்புகளைக் கூட்டணிக் கட்சிகள் போன்று மாற்றி எதிர்க்கட்சிகள் மேல் ஏவி விட்டிருக்கும் பாஜவுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது.

இது இரண்டு பக்கமும் கூரான முனைகளைக் கொண்ட கத்தி என்பதை மறக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறேன். "அடக்குமுறை எப்போதும் வெல்லாது" என்பதை இந்தத் தேர்தல் மூலம், இந்திய நாட்டு மக்கள் பாஜகக்குப் புரிய வைப்பார்கள். பாஜ எனும் மக்கள் விரோத - ஜனநாயக விரோதக் கட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படவுள்ள நாளான ஜூன் 4 இந்தியாவின் இரண்டாவது விடுதலை நாளாக வரலாற்றில் பதியட்டும்.

இந்த வெற்றிச் சரிதம் எழுத, ஈரோடு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும், கரூர் தொகுதி மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி அவர்களுக்குக் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும், நாமக்கல் தொகுதி மக்கள், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 

இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு ஜனநாயகத்தைக் காக்கட்டும். இந்தியாவின் அரசியல் சட்டத்தைக் காக்கட்டும். அரசியல் சட்டம் தந்துள்ள சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, சமூகநீதி என அனைத்தையும் காக்கட்டும்! மொத்தத்தில் உங்கள் வாக்கு தமிழ்நாட்டைக் காக்கட்டும்! உங்கள் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும்! "பாசிசமும் மதவாதமும் வீழ்ந்தது! ஜன நாயகமும் சமத்துவமும் சகோதரத்துவமும் வென்றது!" என்ற புதிய வரலாறு பெரியார் பிறந்த மண்ணில் இருந்து தொடங்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த - இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதும் நமதே, நாடும் நமதே.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இத்தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், நாமக்கல் சின்ராஜ், ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ, திமுக மாவட்ட செயலாளர்கள் நல்லசிவம், பத்மநாதன், மதுராசெந்தில், ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: