சனி, 30 மார்ச், 2024

ஈரோட்டில் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதியன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதியன்று நடைபெறவுள்ளது. அதன் தொடர்ச்சியாக தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 27ம் தேதி முடிவடைந்ததுடன் கடந்த 28ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யும் பணி நிறைவடைந்தது.
மேலும், இறுதி வேட்புமனு திரும்பப் பெறும் கடைசி நாளான இன்று (30ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்த மொத்தம் 37 வேட்பாளர்களில் 6 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவினை திரும்பப் பெற்ற நிலையில், 31 நபர்கள் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில், போட்டியிடவுள்ள 31 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவிற்கு (1) என 32 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

முன்னதாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலையொட்டி, ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார்.

மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா, காவல் பார்வையாளர் ராம கிருஷ்ண சுவரண்கர், செலவினப் பார்வையாளர் லட்சுமி நாராயணா ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். கூட்டத்தில், வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் முடியும் வரை மற்றும் வாக்கு எண்ணும் போதும் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் குருநாதன் (கணக்குகள்), ரகுநாதன் (தேர்தல்), பிரேமலதா (நிலம்), தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கர், உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: