ஈரோடு மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை யொட்டி 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு அடுத்த சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதனையொட்டி, ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் ஈரோடு மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் மாதம் 19ம் தேதி, வாக்குப்பதிவு நிறைவு செய்த பின் வாக்கு பெட்டிகள் வைக்கும் ஸ்ட்ராங் ரூமில் உள்ள பாதுகாப்பு வசதி, சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு, வாக்கு எண்ணும் அறையில் அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கான இட வசதி, அடிப்படை வசதி, வாகனம் நிறுத்தும் இடம் போன்றவற்றை நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு தன்மையை உறுதி செய்தார்.
மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அதிகாரிகளிடத்தில் ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மொடக்குறிச்சி மற்றும் குமாரபாளையம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
0 coment rios: