புதன், 13 மார்ச், 2024

டெபாசிட் வாங்க முடியுமா? பிரதமர் மோடிக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சவால்

ஈரோட்டில் இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களை ஏமாற்றி டெபாசிட்டாவது வாங்கிவிடலாம் என முயற்சிக்கின்றார். இதன் காரணமாக அவர் அடிக்கடி இங்கே வந்து கொண்டிருக்கின்றார். மோடிக்கு சவால் விடுகின்றேன். முடிந்தால் அவர் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று போட்டியிட்டு டெபாசிட் வாங்கட்டும், அப்போது அவரை பிரதமராக ஏற்றுக் கொள்கிறேன்.

சிஏஏ சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தூக்கி எறியப்படும். மோடி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை, மோடியை பற்றி மற்றவர்கள் பேசுவதிலும் அர்த்தம் இல்லை. உக்ரைனில் ஆட்டோ பாம் போட தயாராக இருப்பதாகவும், மோடி பேசியதால் அவர்கள் நிறுத்திவிட்டதாக ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள், மோடியின் மொத்த உருவமே பித்தலாட்டம் பொய் புரட்டு தான். மத்திய அரசு திட்டங்களை தான் தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருவதாக மோடி கூறுகிறார்.திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை ஜெயலலிதா செய்தார்.

கடந்த மூன்று ஆண்டு காலமாக ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நிறைய செய்திருக்கின்றார். பெண்களுக்கு அவர் செய்திருக்கும் திட்டங்கள் மற்ற மாநிலங்களும் அவரைப் பார்த்து பின் தொடர்ந்து வருகின்றன. அவ்வளவு பெரிய சாதனைகளை மூன்றாண்டு காலத்திற்குள் முதல்- அமைச்சர் செய்திருக்கின்றார். போதை கலாச்சாரம் என்பது அரங்கசாமி அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து புழக்கத்தில் இருக்கிறது. இதை தடுக்க அதிமுக தவறிவிட்டது தற்பொழுது நடவடிக்கை எடுக்கும் காரணத்தினால் நிறைய பேர் பிடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் குஜராத்தில் இருந்தும் மோடியின் நண்பரான அதானியின் துறைமுகத்தில் இருந்து தான் இந்தியா முழுவதும் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி வெற்றி பிரகாசமாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜக டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம். தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் மூன்று நாட்களில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை குஷ்பு மகளிர் உரிமைத் தொகை பற்றி கூறிய கருத்து சர்ச்சையாகி உள்ளதே என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் இடம் கேட்டபோது, குஷ்பு பிச்சை எடுப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றார். விரைவில் அந்த நிலைமை அவருக்கு வரும் என்றார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: