வியாழன், 28 மார்ச், 2024

திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் கொண்டு செல்ல இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்: கனிமொழி பேச்சு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதியன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி இந்தியா கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குகளைச் சேகரித்தார். ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள சிவகிரியில் கூடி நின்ற மக்களைச் சந்தித்து,உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளிக்கப் பிரச்சாரம் செய்தார்.

இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளரும், வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆய்த்தீர்வைத் துறை அமைச்சருமான முத்துசாமி, திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன், செய்தி மற்றும் விளம்பரம் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பே.சுவாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி பேசியதாவது, நமது வேட்பாளர் பிரகாஷ் திராவிட பாரம்பரியம் கொண்டு வேட்பாளர். இந்த தேர்தல் நமக்கு ஓர் சுதந்திர போராட்டம், இந்த தேர்தலில் அவர்களுக்கு எதிராக நாம் வெற்றி பெறவில்லை என்றால் இது தான் இந்தியாவிற்கே கடைசி தேர்தல். ஒருவருக்கு ஜாமின் என்பது அடிப்படையான ஒன்று, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமின் வழங்கவில்லை, 95 சதவீத சிபிஐ, இடி வழக்குகள் எதிர்கட்சியினர் மீது போட்டுள்ளனர்.

நாரி சக்தி என்று கூறும் பிரதமர், பாஜகவில் பாலியல் வன்கொடுமை குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட 44 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் எதிராகப் போராட்டம் உங்களுக்குத் தெரியும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணிப்பூரில் இன்னும் கலவரம் அடங்கவில்லை, இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். உலகம் முழுவதும் சுற்றும் மோடி, மணிப்பூர் சென்று மக்களைச் சந்திக்கவில்லை.

அனைவருக்கும் 15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுவோம் என்று சொன்னார். ஆனால் நாம் ரூ.500, ரூ.1,000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தனர். தற்போது ரூ.2,000 ரூபாயும் செல்லாது என்று சொல்லிவிட்டார். கேலிக் கூத்தான ஆட்சி நடைபெறுகிறது. மழை வெள்ளம், புயல் பாதித்த பொழுது எல்லாம் வராத மோடி, தேர்தல் வரும் சமயம் என்பதால் 10க்கும் அதிகமான முறை தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். அவர் எத்தனை முறை இங்கு வந்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது.

நாங்கள் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது இந்த பகுதி சார்பாக உங்கள் வேட்பாளர், இப்பகுதி மக்கள் அதிகமாகப் புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர், ஆகையால் இதற்கென்ன பிரத்தியேக சிறப்பு மருத்துவமனையும் ஆய்வாகவும் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். அவர் வேட்பாளராக அறிவிக்கும் முன்பே உங்கள் நலன் குறித்துச் சிந்திக்கிறார் எனத் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உணர்வோடு இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். உங்கள் வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: