சனி, 23 மார்ச், 2024

மத்திய அரசிடம் மண்டியிட்டாவது திட்டங்களை பெறுவேன்: ஈரோடு அதிமுக வேட்பாளர்

நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிட உள்ளார். இவர் நேற்று ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எனது தாயார் சவுந்தரம் 1991-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றார். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண், திருமணமான பிறகு கல்லூரியில் படித்து, முனைவர் பட்டம் பெற்று, பேராசிரியையாக பணியாற்றி, பொதுத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று எம்பியாக இருந்ததே மிகப்பெரிய சாதனை. அப்படிப்பட்ட எனது தாயார், தனது பதவிக்காலத்தில் தனது தொகுதி மக்களுக்காக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார்.

குறிப்பிடத்தக்க வகையில் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டுக்கான குழுவில் உறுப்பினராக இருந்து, இடஒதுக்கீடு முறைப்படுத்தப்பட ஆவன செய்தார். பெண் குழந்தைகள் விகிதாச்சாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக சிசுக்கொலை தடுப்புக்கான எம்பிக்கள் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தவர். ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதலாக 2 பிளாட்பாரங்கள் எனது தாயார் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பது எத்தனை பேருக்கு தெரியும். அதுமட்டுமா அவரது சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் அதிமுக எம்பியாக அவர் சாதனைகள் செய்தார்.

அனால், தற்போது எனக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் எனது தாயார் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று இழிவாக பேசி உள்ளார். இது கண்டிக்கக்கத்தது. நான் எந்த பதவியிலும் இதுவரை இல்லை. ஆனால் சமூக தொண்டாக, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கோவில்கள் சீரமைப்பு, பள்ளிக்கூடங்கள் புதுப்பித்தல், குறைந்த விலையில் உணவு, குறைந்த செலவில் மருத்துவம் என்று பல திட்டங்களை மக்களுக்காக அளித்திருக்கிறேன்.

என்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளருக்கு ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை ஊராட்சிகள் உள்ளன என்று தெரியுமா, அவருக்கு மட்டுமல்ல, தற்போதைய எம்.பி.க்கு தெரியுமா. அவர்கள் அங்கெல்லாம் சென்று இருக்கிறார்களா?. ஆனால் நான் தொகுதியில் உள்ள 149 ஊராட்சிகள், 24 பேரூராட்சிகள், 5 நகராட்சிகள், ஒரு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் மக்களுக்கு நல உதவிகள் செய்து இருக்கிறேன். 

ஒரு தொண்டு நிறுவனமாக என்னால் செய்ய முடிந்ததை செய்து இருக்கிறேன். இன்னும் வளர்ச்சி திட்டங்களை அரசின் பதவியில், அதிகாரத்தில் இருந்தால்தான் நிறைவேற்ற முடியும் என்பதால் எம்பி பதவிக்கு போட்டியிடுகிறேன். நான் இதற்கு முன்பு பா.ஜனதாவில் இருந்தபோது பிரதமரை சந்தித்தபோது இந்த தொகுதிக்கு தேவையான திட்டங்கள் குறித்து விண்ணப்பம் அளித்திருக்கிறேன். ஆனால் எம்பி பதவியில் இருந்தவர் ஏதேனும் ஒரு திட்டம் தேவை என்று கேட்டு இருப்பாரா? கேட்டு இருந்தால்தானே திட்டங்கள் கிடைக்கும். நான் எம்பியாக ஆனால் கண்டிப்பாக ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்காக மத்திய அரசிடம் மண்டியிட்டாவது திட்டங்களை பெற்றுத்தருவேன்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க மட்டும் எம்பிக்களை நாம் புதுடெல்லிக்கு அனுப்பவில்லை. நமது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகத்தான் அங்கேயே வீடு, விமானம், ரெயிலில் இலவச பயணம் என்று வசதிகள் தருகிறார்கள். எனவே நான் புதுடெல்லியில் லாபி செய்தாவது திட்டங்களுக்காக தொடர்ந்து போராடுவேன். என்னையோ, என் தாயாரையோ பற்றி பேசுபவர்கள் சரியான புள்ளிவிவரங்களை பார்த்து பேச வேண்டும். நான் விவாதத்துக்கு தயாராக இருக்கிறேன். நேரடியாக என்னிடம் பேச திமுக வேட்பாளர் தயாரா?. “ஐ ஆம் வெயிட்டிங்”.

இவ்வாறு அவர் கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: