செவ்வாய், 26 மார்ச், 2024

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா: லட்சம் பக்தர்கள் குண்டம் இறங்கிய நேர்த்திக்கடன்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் புகழ் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 12ம் தேதி பூச்சாற்றுடன் தொடங்கியது. சத்தியமங்கலம் மற்றும் பண்ணாரி சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் பண்ணாரி அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா வந்து மக்களுக்கு காட்சியளித்தார்.

கடந்த 19ம் தேதி கம்பம் விழா தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நாளான இன்று குண்டம் திருவிழா திங்கட்கிழமை (25ம் தேதி) இரவு 8 மணி அளவில் குண்டத்தில் விறகுகள் பூ அடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (26ம் தேதி) அதிகாலை 3.50 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து தாரை தப்பட்டை வான வேடிக்கைகள் முழங்க அம்மன் அழைத்து வரப்பட்டு குண்டத்தை வந்து அடைந்தது. பூசாரி பார்த்திபன் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பிறகு கற்பூர தட்டுடன் முதலில் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார்.

அவரைத் தொடர்ந்து மற்ற பூசாரிகள் மற்றும் பொதுமக்கள் குண்டத்தில் இறங்கினர். திருவிழாவில் தமிழக அரசு செயலாளர் அமுதா, எஸ்டிஎப் ஐஜி முருகன், அறநிலைத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் குண்டத்தில் இறங்கினர். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டத்தில் இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். குண்டம் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி மேற்பார்வையில் கோயில் துணை ஆணையர் மேனகா தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார், பெண் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படை வீரர்கள் 108 ஆம்புலன்ஸ் ஆகியவை தயார் நிலையில் இருந்தனர். ஏப்ரல் ஒன்றாம் தேதி மறு பூஜை நடைபெற உள்ளது.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: