திங்கள், 4 மார்ச், 2024

பண்ணாரி அருகே உடல் நலக்குறைவால் உயிருக்கு போராடும் பெண் யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் - பண்ணாரி சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் குட்டியுடன் வந்த தாய் யானை ஒன்று உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்தது. இதைப் பார்த்த குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து பிளறிக் கொண்டிருந்தது. குட்டி யானையின் சத்தம் கேட்டு அருகில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்து பார்த்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பக உதவி கால்நடை மருத்துவர் சதாசிவம் மற்றும் வனத்துறையினர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து, தாய் யானைக்கு குளுக்கோஸ் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர், உண்பதற்கு இலைகள் போன்றவற்றை வனத்துறையினர் அளித்து வருகின்றனர். மேலும், குட்டி யானைக்கு பால் மற்றும் தண்ணீர் வழங்கி அகழி அமைத்து பராமரித்து வருகின்றனர். தாயை விட்டு பிரிய முடியாமல் இருக்கும் 2 மாத குட்டி யானையின் பாசப் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. 

இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் சுதாகர் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: