பெரியார் சிலைகளிலோ, மணிமண்டபங்களிலோ வாழவில்லை. தனது கருத்துக்களால் தான் தொடர்ந்து வாழ்கிறார் என்று ஈரோட்டில் திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்தார்.
சமூகநீதிக் கூட்டமைப்பு மற்றும் புதுமலர் பதிப்பகம் சார்பில், இந்து தமிழ் திசை வெளியீடான 'என்றும் தமிழர் தலைவர்’ நூல் அறிமுக விழா ஈரோடு பெரியார் மன்றத்தில் நடந்தது. சமூகநீதிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமை வகித்தார். ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி வாழ்த்துரை வழங்கிப் பேசும்போது, தேவையான நேரத்தில், தேவையான நூலை இந்து தமிழ் திசை வெளியிட்டுள்ளது. தமிழக கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் கூட சமஸ்கிருத வழிபாட்டு முறை உள்ளது. இதனை மாற்ற வேண்டும். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சனாதனம் வேறு, இந்து மதம் வேறு என்ற புரிதலை, இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு பெரியார் தொடர்பான புத்தகங்கள் தேவையாய் உள்ளன, என்றார்.
இதனைத் தொடர்ந்து, பெரியாரின் பேரனும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசும்போது, பெரியாரைப் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை நான் படித்துள்ளேன். அவற்றில் என் மனம் கவர்ந்த நூலாக, ‘என்றும் தமிழர் தலைவர்’ நூல் அமைந்துள்ளது. பெரியாரின் வரலாறு மட்டுமல்ல, பெரியாரைப் பற்றி முழுமையாக அறிய இந்த நூல் உதவும். உங்கள் வீடுகளில் இந்த நூல் ஒரு பொக்கிஷமாக இருக்கும், என்றார்.
விழாவில், ’என்றும் தமிழர் தலைவர்’ நூலினை அறிமுகம் செய்து, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் பேசியதாவது, எதிர்காலத்திற்கும் பொருத்தமாக இருக்கும் வகையில், ‘என்றும் தமிழர் தலைவர்’ என நூலிற்கு இந்து குழுமம் பெயர் வைத்துள்ளது. பெரியார் குறித்து என் போன்றோர் தொகுத்து இருந்தால் கூட, இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. அந்த அளவுக்கு, அனுபவத்துடன் இந்த நூலை உருவாக்கி உள்ளனர்.
இந்த நூலை வாங்குவதும், படிப்பதும் தான் பெரியாருக்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும். பெரியார் வாழ்ந்த காலத்திலேயே பல அவமரியாதைகளைச் சந்தித்துள்ளார். பாராட்டிற்கு மயங்காமல், வசவுகளுக்கு வருத்தப்படாமல் பெரியார் தன் கடமையை தொடர்ந்து செய்து வந்தார். எதையும் மறைக்காத குணம் கொண்டவராக பெரியார் வாழ்ந்தார். பெரியார் சிலைகளிலோ, மணிமண்டபங்களிலோ வாழவில்லை. தனது கருத்துக்களால்தான் தொடர்ந்து வாழ்கிறார் எனப் பேசினார்.
இவ்விழாவில், ஆய்வறிஞர் வீ.அரசு, திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் சண்முகம், மாநகராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ்குமார், ரவி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். இந்து தமிழ் திசை நாளிதழின் துணை ஆசிரியரும், ‘என்றும் தமிழர் தலைவர்’ தொகுப்பாசிரியர் ஆதி வள்ளியப்பன் ஏற்புரையாற்றினார். மேலும், விழாவில் பங்கேற்றோர் நூலினை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
0 coment rios: