ஈரோட்டில் அதிகபட்சமாக செவ்வாய்க்கிழமை (நேற்று) 106.16 டிகிரி பரான்ஹீட் வெயில் அளவு பதிவானது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது.
கடந்த 4 நாள்களாக தொடர்ந்து 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேலாகவே வெயில் பதிவாகி இருந்தது. இதனால் வெயில் சுட்டு எரித்தது. பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கினர். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) 2ம் தேதி நடப்பாண்டில் அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவாக 106.16 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
குறிப்பாக, காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் பேருந்துகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட இந்த ஆண்டு வெப்பத்தின் பிடியில் ஈரோடு சிக்கி தவிக்கிறது. வெயிலின் கொடுமையை சமாளிக்க முடியாமல் மக்கள் குளிர்பான கடைகளை தேடி செல்கிறார்கள்.
ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கவுள்ளது. இப்போதே 106 டிகிரி வெயில் கொளுத்தும் நிலையில், எதிர் வரும் கத்திரி வெயிலை எதிர்கொள்வது எப்படி என மக்கள் கடும் அச்சம் அடைந்து உள்ளனர்
0 coment rios: