புதன், 24 ஏப்ரல், 2024

அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்

அந்தியூர் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 26ம் தேதி மற்றும் மே 7ம் தேதி என 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக வருகிற 26ம் தேதி 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதால், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க தமிழக - கர்நாடக மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் 3 பறக்கும் படையினர், எல்லை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அந்தியூர் தொகுதியில் வரட்டுப்பள்ளம் அணை சோதனைச்சாவடி, பர்கூர் காவல் நிலையம், கர்ககேண்டி சோதனைச் சாவடி, ஆகிய பகுதிகளிலும், பவானிசாகர் தொகுதியில் காரப்பள்ளம் சோதனைச் சாவடியிலும் தேர்தல் பறக்கும் படையினர் கர்நாடக மாநிலம் நோக்கி செல்லும் வாகனங்களை தீவிரமாக வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்தியூர் தொகுதி வரட்டுப்பள்ளம் சோதனைச்சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு பழனிவேல் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் வட்டம் ஹனூர் தொடவாத்தூர் ராமாபுரம் பகுதியை சேர்ந்த பாபு மகன் மாதேவன் (வயது 32) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 900 பணம் வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், வெங்காய வியாபாரியான மாதேவன் ஈரோட்டில் சந்தையில் வெங்காயம் விற்ற பணத்தைக் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அதிகாரிகள் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அவரிடம் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து, பறக்கும் படையினர் அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 900ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை மண்டல துணை வட்டாட்சியர் ராஜசேகரிடம் ஒப்படைத்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: