ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சிந்தகவுண்டம்பாளையம் அம்மன்கோவில் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் பூபதி (வயது 30), அங்கமுத்து (வயது 32), இவர்களுடைய கல்லூரி நண்பர் குருதேவ் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 36) என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் ஆனார். அப்போது, அவர் தான் சென்னை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரியாக வேலை செய்து வருவதாகவும், தன்னால் அரசு வேலை வாங்கி தர முடியும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய பூபதியும், அங்கமுத்துவும் கடந்த 2021ம் ஆண்டு பல தவணைகளாக ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால், அரசு வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்ததால் சந்தேகமடைந்த இருவரும், தலைமைச் செயலகத்துக்கு சென்று விசாரித்த போது ராஜேஷ்குமார் அங்கு வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைத் திரும்பக் கேட்ட போது தங்களை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டால் கொலை செய்து விடுவோம் என இருவரும் மிரட்டியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த ராஜேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அந்தியூர் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார். அதன்பேரில் அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை வலைவீசி தேடினர். தன்னை போலீசார் தேடுவதை அறிந்ததும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ்குமார் தலைமறைவானார்.
இந்த நிலையில் ராஜேஷ்குமார் சென்னையில் பதுங்கி இருந்து உணவு வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார், சென்னைக்கு சென்றனர். பின்னர் சென்னை அம்பத்தூரில் உள்ள திருமலை பிரியா நகரில் பதுங்கி இருந்த ராஜேஷ்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
0 coment rios: