திங்கள், 29 ஏப்ரல், 2024

ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்று முடிந்த தேர்தலில் பயன்படுத்திய வாக்கு இயந்திரங்கள், சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இவை துணை ராணுவப் படை, சிறப்பு ஆயுதப் படையினர், துப்பாக்கி ஏந்திய உள்ளூர் காவலர்கள் உள்ளிட்ட மூன்றடுக்கு பாதுகாப்பு மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

221 கண்காணிப்பு கேமரா மூலம் வாக்கு இயந்திரங்கள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறைக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த ஒரு சிசிடிவி கேமரா நேற்று இரவு 11.30 மணியளவில் பழுதானது. அதனைத் தொடர்ந்து, 1 மணி நேரத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களை அழைத்து பழுதான சிசிடிவி சரிசெய்யப்பட்டு கேமரா மாற்றப்பட்டது.

இதனையடுத்து, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா, சீலிடப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பழுதான சிசிடிவி கேமரா குறித்து, அவர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 19ம் தேதி 1,688 வாக்குச்சாவடிகளில் நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான சித்தோடு, ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.

தொடர்ந்து, 20ம் தேதி சட்டமன்றத் தொகுதி வாரியாக பாதுகாப்பு இருப்பறையில் வைக்கப்பட்டு, தேர்தல் பொது பார்வையாளர், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் இடப்பட்டது. மேலும், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் தொடர்ந்து கண்காணித்திட கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பறையானது மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அடுக்கு மத்திய ஆயுதப்படை காவலர்கள் மற்றும் 2 அடுக்குகள் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 221 சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 8 கேமிராக்கள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு 48 கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கேமிரா 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஸ்ட்ராங் ரூம்முக்கு வெளிப்புறமுள்ள கதவுகளை கண்காணிக்கும் வகையிலும், 7 கேமிராக்கள் நடைபாதையை கண்காணிக்கும் வகையிலும், மேலும், மீதமுள்ள கேமிராக்கள் வெளிப்புறத்தில் சாலை, கதவு மற்றும் வெளிப்புறமுள்ள வளாகத்தை கண்காணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து கேமிராக்களையும் கண்காணிக்கும் வகையில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட ஒரு சிசிடிவி கேமிரா பழுது ஏற்பட்டது. உடனடியாக வெண்டர் மூலமாக ஒரு மணிநேரத்தில் பழுது சரிசெய்யப்பட்டு கேமரா மாற்றப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4 வரை தொடர்ந்து கண்காணிக்கும் பணிகள் நடைபெறும்.

மேலும், சிசிடிவி கேமிராக்கள் பதிவு 3 மாதங்கள் வரை பாதுகாப்பாக வைக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: