நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான நாளை (ஏப்ரல் 19ம் தேதி) வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு செல்லும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
இந்தியத் தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் நாளை நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு, 10,970 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதன்மை அலுவலர்கள், முதல்நிலை, இரண்டாம்நிலை, மூன்றாம் நிலை அலுவலர்களுக்கான 3-வது கட்ட பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் முதன்மை அலுவலர்கள், முதல்நிலை, இரண்டாம்நிலை, மூன்றாம் நிலை அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இரவு தங்குவதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,688 வாக்குச்சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையமான சித்தோடு, ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் அந்தந்த தொகுதியில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதத்தை பதிவு செய்வார்கள். மேலும், வீடியோ கண்காணிப்பு குழுக்கள், பறக்கும்படை குழுக்கள் தீவிரப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் சுமார் ரூ.5.62 கோடி மதிப்பீட்டிலான பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, இதில் உரிய ஆவணங்கள் சமர்பித்ததன் அடிப்படையில் ரூ.3.41 கோடி மதிப்பீட்டிலான பணம் மற்றும் பொருட்கள் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடியை , https://www.elections.tn.gov.in/ElectoralServices.aspx பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 191 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மத்திய ஆயுத படை காவலர்கள் இருப்பார்கள். மேலும், மாவட்டம் முழுவதும் 1,476 வாக்குச்சாவடிகளில் Webcasting நடைபெறும்.
வாக்குப்பதிவு நாள் அன்று 191 பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க எல்.ஐ.சி, தபால் நிலைய அலுவலர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்கள் தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மற்றும் கொமாரபாளையம் எஸ்.எஸ்.எம் லட்சுமி அம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்படுவதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன், வட்டாட்சியர்கள் முத்துகிருஷ்ணன் (ஈரோடு), சண்முகவேல் (குமாரபாளையம்) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 coment rios: