வெள்ளி, 5 ஏப்ரல், 2024

கம்பம் எடுத்தல், மஞ்சள் நீராட்டு விழா: ஈரோட்டில் நாளை போக்குவரத்து மாற்றம்

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் நாளை (6ம் தேதி) சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு கம்பம் எடுத்து மஞ்சள் நீராட்டு விழா நடப்பதால், மாநகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பம் எடுத்து மஞ்சள் நீர் விழா வழக்கப்படி காரைவாய்க்காலில் விடுதல் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு ஈரோடு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

கம்பம் செல்லும் வழிகள்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு (மூன்று கம்பங்கள் ஒன்று சேரும் ) அதன்பின், ஈஸ்வரன் கோயில் வீதி, காமராஜ் வீதி, மீனாட்சி சுந்தரனார் சாலை, அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் ரோடு, ஸ்வஸ்திக் ரவுண்டானா, சத்தி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி ரோடு, மணிக்கூண்டு, பெரியார் வீதி, மரப்பாலம் (மீண்டும்) மண்டபம் வீதி, கச்சேரி வீதி, ஆர்கேவி ரோடு, நகர காவல் நிலையம், அக்ரஹாரம் வீதி வழியாக சென்று காரை வாய்க்காலில் கம்பம் விடப்படுகிறது.

எனவே பொதுமக்கள் மேற்கண்ட சாலைகளில் தங்கள் வாகனங்களை ஓட்டி வராமல் காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

போக்குவரத்து மாற்றம் (மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை):- 

• சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து பள்ளிபாளையம் வழியாக ஈரோடு வரும் பேருந்துகள் காவேரி ரோடு, கே.என்.கே ரோடு, மூலப்பட்டறை வழியாக திருநகர் காலனி வந்து வ.உ.சி பார்க் பின்புறம் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பவும் காவேரி ரோடு வழியாக செல்லவேண்டும்.

• கோபி, சத்தி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் லோட்டஸ் ஷோரூம் அருகில் பயணிகளை இறக்கிவிட்டு வீரபத்திர இரண்டாவது வீதி வழியாக (வி.ஒ.சி பார்க் தெற்கு வாயில் வழியாக) திரும்பி வீரப்பத்திரா முதல் வீதி வழியாக சத்தி சாலையை அடையவேண்டும். பவானி, அந்தியூர் பகுதியிலியிருந்து வரும் பேருந்துகள் அசோசியேசன் பெட்ரோல் பங்க் அருகில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்ப செல்ல வேண்டும்.

• திருச்செங்கோடு, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களிலிருந்து ஈரோடு வழியாக கோவை செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் காவேரி ரோடு, திருநகர் காலனி அசோசியேசன் பெட்ரோல் பங்க், வீரபத்திர வீதி வீரப்பன்சத்திரம், கனிராவுத்தர் குளம் சித்தோடு வழியாக செல்லவேண்டும். கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து பெருந்துறை வழியாக வரும் வாகனங்கள் பெருந்துறை ரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டாணாவில் வலது புறம் திரும்பி பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பெருந்துறை சாலையிலேயே செல்ல வேண்டும்.

• தாராபுரம், காங்கயம், கொடுமுடி, கரூர், திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள ஊர்வலம் புறப்பட்டு மணிக்கூண்டிலிருந்து ஈஸ்வரன் கோவில் சாலைக்கு திரும்பும் வரை காளைமாட்டுச் சிலை, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, ஈ.வி.என் ரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா, வாசுகி வீதி வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும். ஊர்வலம் காமராஜர் வீதியை அடைந்தவுடன் காளை மாட்டு சிலையிலிருந்து பி.எஸ்.பார்க் மணிக்கூண்டு வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

• கோவையிலிருந்து ஈரோடு வழியாக திருச்செங்கோடு, சேலம், நாமக்கல் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் பெருந்துறை ரோடு வீரப்பன்பாளையம் பிரிவு வழியாக (நசியனூர் சாலை வழியாக) வில்லரசம்பட்டி நால்ரோடு சென்று அங்கிருந்து கனிராவுத்தர் குளம், வீரப்பன்சத்திரம் 16 நெம்பர் ரோடு வழியாக பள்ளிபாளையம் வழியாக செல்ல வேண்டும். அல்லது ரிங்ரோடு வழியாக கொக்கராயன்பேட்டை வழியாக செல்ல வேண்டும்.

• மேலும் இதர இலகுரக வாகன ஓட்டுனர்கள் கம்பம் வரும் வழிகளை தவிர்த்து மாற்று வழிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: