திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை துடுப்பதி, சீரங்க கவுண்டம்பாளையம், சீனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக அரசு பெண்களுக்கு வழங்கி வரும் உரிமை தொகை ரூ.1000 என்பது சில எதிர்க்கட்சிகளுக்கு பிச்சைக் காசாக தெரியலாம். அவர்களைப் போன்ற வசதி படைத்தவர்களுக்கு அந்த பணத்தின் அருமை தெரியாது. ஏழை, எளிய குடும்பத்தினரின் கஷ்டம் தெரியாது. ஆனால் அதனால் பயனடையும் பெண்களுக்கு தான் அதன் அருமை தெரியும். தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 17 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகையான ரூபாய் ஆயிரம் வீதம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை மகளிர் உரிமைத் தொகை வராத 45 லட்சம் மகளிருக்கு இந்த தேர்தலுக்குப் பின் கட்டாயம் தொகை பெற்றுத் தரப்படும் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.
இதேபோல இலவச பேருந்து பயணத்தால் பல கோடி பெண்கள் தினந்தோறும் பயனடைந்து வருகிறார்கள். நாட்டிலேயே எங்கும் இல்லாத வகையில் பள்ளிக்கூடங்களில் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்தி குழந்தைகளுக்கு உணவளிக்கும் மாபெரும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து செய்து வைத்தார். இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து 500 ரூபாய் ஆக குறைக்கப்படும். 100 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் 75க்கும், 90 ரூபாய்க்கு விற்கப்படும் டீசல் விலை 65க்கும் குறைக்கப்படும். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
தற்போது தமிழகத்தை ஆளுகின்ற ஸ்டாலின் தலைமையில அரசு ஏழைகளுக்கான அரசு. முன்பெல்லாம் கோடைகாலத்தில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்படும். அதன் மூலம் விசைத்தறி தொழிலில் இருந்து எல்லா தொழிலும் பாதிக்கப்படும். ஆனால் இப்பொழுது அது மாதிரியான நிலை ஏற்படவில்லையே; அதை வைத்து அரசியல் செய்யலாமே என்று நினைத்திருந்த எதிர் கட்சிகள் வருத்தப்படுகிறார்கள். ஏனென்றால் மின்வெட்டும் இல்லை. தடையில்லா மின்சாரத்தால் தொழில் பாதிப்புகளும் இல்லை.
கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் இந்த பெருந்துறை பகுதி கிராமங்கள் தட்டுப்பாடு இன்றி நல்ல குடிநீரை நான் அமைச்சராக இருந்த காலத்தில் பெற்றுக் கொடுத்தேன்.
திமுக ஆட்சியில் கிராம சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு உள்ளன. பெருந்துறை- துடுப்பதி இடையிலான தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கு பாராளுமன்றத்தில் சுப்பராயன் எம்.பி. பேசி அனுமதி பெற்று தந்துள்ளார். வெகு விரைவில் அந்த கட்டுமானப் பணிகள் தொடங்கி ஒரே ஆண்டுக்குள் மேம்பாலம் கட்டி முடிக்கப்படும். நம்ம ஊருக்கு மிகவும் தேவையான இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டால் நம்முடைய கிராமங்களுக்கு போக்குவரத்து மிகவும் எளிமையாகிவிடும். எனவே சுப்புராயன் எம்.பி.க்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவரை அழைத்து வந்து பெருந்துறை பகுதியில் கூட்டம் நடத்தி மக்கள் குறைகளை கேட்டு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை நான் எடுப்பேன். இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் பேசினார்.
0 coment rios: