ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமாருக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் தலைவரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன், ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளில் சைக்கிள் ஓட்டியபடி சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, அவர் வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, நமது வேட்பாளர் விஜயகுமார் பிரதமர் மோடியின் அன்பை பெற்றவர். ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பவராக திகழ்கிறார். அவர் உங்களது பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் வாதாடி, போராடி தீர்த்து வைக்க கூடியவர்.
எனவே வேட்பாளர் விஜயகுமாருக்கு உங்களது வாக்குகளை சைக்கிள் சின்னத்தில் அளிக்க வேண்டும். மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும். அதன் அடிப்படையில் வளமான தமிழகம், வலிமையான பாரதம் அமையும். பிரதமர் மோடியின் ஆட்சி நல்லரசாக செயல்படுகிறது. இந்திய அரசை வல்லரசாக மாற்றக் கூடியவர். இந்திய நாட்டின் பொருளாதாரம் மென்மேலும் உயர வேண்டும். நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அதற்கு பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். எனவே நீங்கள் சைக்கிள் சின்னத்துக்கு அழைக்கும் வாக்கு உங்கள் தொகுதியின் வளர்ச்சியாகவும், நாட்டின் வளர்ச்சியாகவும் அமையும் என கூறினார். முன்னதாக ஈரோடு பெருந்துறை சாலையில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அங்கிருந்து சைக்கிள் ஓட்டி பிரசாரத்தை தொடங்கினார்.
பின்னர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் திறந்த வேனில் ஏறிய அவர் சூரம்பட்டி நால்ரோடு, ரெயில் நிலையம், பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, எல்லை மாரியம்மன் கோவில், சத்திரோடு, வீரப்பன்சத்திரம், சூளை, கனிராவுத்தர் குளம், பி.பி.அக்ரஹாரம், ஆர்.என்.புதூர், பெருமாள் மலை, லட்சுமி நகர் வழியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்துக்கு சென்றார்.
0 coment rios: