சனி, 18 மே, 2024

ஈரோடு: பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன ஊழியர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 67). இவர் ஈங்கூரில் உள்ள தனியார் பள்ளிக்கூட தலைவராக உள்ளார். இவரது மனைவி உமையவள்ளி. அதே பள்ளிக்கூடத்தில் முதல்வராக உள்ளார். இவர்களுக்கு அஸ்வின் என்ற மகன் உள்ளார். இளங்கோ கடந்த 16ம் தேதி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகரிடம் புகார் மனு அளித்தார்.

அதில், எனது தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்தபோது நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் வெற்று பத்திரம், காசோலைகளை கொடுத்து பலரிடம் கடன் வாங்கி இருந்தார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்குகளை நடத்த ஒருவரை நியமிக்க முடிவு செய்தோம். கடந்த 2023 ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற போது சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி 5வது வீதியை சேர்ந்த ஆனந்த் வைஷ்ணவ் (வயது 37) என்பவர் அறிமுகமானார்.

அவர் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்றும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் அரசு இணைச்செயலாளராக பணியாற்றியதாகவும், தற்போது, பிரதமர் அலுவலகத்தில் உளவுத்துறை பணியகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். இதனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கை சிறப்பாக நடத்தி சாதகமாக உத்தரவு பெறமுடியும் என்று கூறி ஆனந்த் வைஷ்ணவ் ஆசை வார்த்தை கூறினார்.

அதை நம்பி, கடந்த 2023 ஆண்டு மே மாதம் 22ம் தேதி முதல் கடந்த 15ம் தேதி வரை பல தவணைகளில் ரூ.27 லட்சத்து 93 ஆயிரத்து 344 அனுப்பினேன். மேலும், எனது மகன் அஸ்வினுக்கு இந்தியன் கிரிக்கெட் வாரியத் தில் மாணவர்கள் பயிற்சி பிரிவுக்கு இயக்குநர் பணி வாங்கி தருவதாகவும், மாதம் ரூ.4.15 லட்சம் சம்பளம் தருவார்கள் என்றும், அந்த பயிற்சி துபாயில் நடக்கும் என்றும் கூறி மகன் மற்றும் மருமகளின் அசல் பாஸ்போர்ட் பெற்று சென்றார்.

இதுதவிர ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மோதிரம், 5 செல்போன்களையும் ஆனந்த் வைஷ்ணவ் எடுத்துச் சென்றார். இந்தநிலையில் எங்களுடைய சொத்துகளை அபகரிக்கும் வகையில் பத்திரத்தில் அவர் மிரட்டி கையெழுத்து வாங்கினார். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராததால் அது பற்றி கேட்டபோது, உங்களை கொலை செய்து பழியை உங்களது மகன் மீது போட்டு விடுவேன் என மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் எனக் கூறியிருந்தார். 

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இளங்கோவிடம் மோசடி செய்த ஆனந்த் வைஷ்ணவ், எம்எஸ்சி முதுகலை பட்டம் படித்து விட்டு, பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பதும், எவ்வித அரசு பணிகளில் பணியாற்றாதவர் என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, ஆனந்த் வைஷ்ணவை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்த போலீசார் அவரது வங்கி கணக்கை முடக்கி, 2 அசல் பாஸ்போர்ட், ஒரு தங்க மோதிரம் ஆகியவற்றை மீட்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: