புதன், 15 மே, 2024

தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்... தமிழக தலைமைச் செயலாளருக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் கடிதம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து தர வலியுறுத்தி சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் தலைமைச் செயலாளருக்கு கடிதம். 

சேலம் மேற்கு தொகுதிக்கு பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து தர வலியுறுத்தியும், குறிப்பாக மேட்டூர் அணையில் இருந்து சேலம் மேற்கு தொகுதிக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருவதால் இந்த தற்பொழுது நிலவி வரும் கோடை காலத்தில் பொதுமக்களின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தி சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். 

அந்த கடிதத்தில், சேலம் மாவட்டத்தில் இந்த கோடைகாலத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு மேட்டூரில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் குழாய் சேலம் ஐந்து ரோடு முதல் சாரதா கல்லூரி வழியாக வருகிறது. இந்த குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு நீண்ட காலம் ஆவதால் ஐந்து ரோடு, சொர்ணபுரி மற்றும் அழகாபுரம் பகுதிகளில் அடிக்கடி குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒருமுறை இந்த குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு வார காலம் ஆகிறது. இதன் காரணமாக சேலம் மாநகரத்தில் குடிநீர் வினியோகம் என்பது ஒரு வார காலத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. உதாரணத்திற்காக சில மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகிய தான் வசிக்கும் சேலம் ஐந்தாவது கோட்டத்திற்கு உட்பட்ட அருண் நகர் மற்றும் ராஜராஜன் நகர் பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் என்று ஆகிவிட்டது. ஆகவே சேலம் மாநகர மக்களின் நலன் கருதி பழைய குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு புதிய பிரதான குடிநீர் குழாய்களை அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன். 

இதே போல தனது தொகுதிக்கு உட்பட்ட புறநகர் கிராம பகுதிகளான ஓமலூர் ஒன்றியம், சேலம் ஒன்றியம் மற்றும் தாரமங்கலம் ஒன்றியத்திற்கு வருகின்ற குடிநீர் குழாய்கள், புதிதாக ஓமலூரில் இருந்து தாரமங்கலம், கொங்கணாபுரம், வழியாக பரமத்தி வேலூர் வரையில் சாலை மேம்பாட்டு பணி நடைபெறுவதால், ஓமலூர் தாரமங்கலம் பகுதிகளில் சாலை பணிகளை மேற்கொள்ளும் சாலை ஒப்பந்ததாரர் குடிநீர் குழாய்களை உடைத்து விடுவதால், பொது மக்களுக்கு பெரும் பாதிப்பாக அமைவதோடு அந்த பகுதி பொது மக்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கூட தண்ணீர் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

கோடை காலமாக உள்ளதால் பொதுமக்களின் நலன் கருதியும், அவர்களின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கும், குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்படுவதை தடுத்து விடவும், உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்று சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா.  அருள் தமிழக தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கருத்தத்தில் வலியுறுத்தியுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: