சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தீவிட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலில் அர்ச்சகராக தலித் சமூகத்தைச் சார்ந்தவரை நியமனம் செய்ய நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.....
அம்பேத்கார் மக்கள் இயக்கம் கோரிக்கை.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி,பழைய காவல் நிலையம் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் தலித் மக்களும் பல்வேறு சமூகத்தினரும் காலம் காலமாக சென்று மாரியம்மனை வழிபட்டும் ஒரு சில பூஜைகளை செய்தும் வந்துள்ளனர். இச்சூழலில் தற்போது நடைபெற்ற திருவிழாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சென்று வழிபடுவதற்கு 1.5.2024 அன்று அங்குள்ள வன்னியர் சமூக மக்கள் தடுத்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து தாசில்தார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் 2.5.2024 அன்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படாத சூழலில், இதனால் ஏற்பட்ட மோதலில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், கடைகள் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. தலித் மக்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதையெல்லாம் தாண்டி தலித் சமூக மக்கள் வசிக்கின்ற பகுதியில் காவல்துறை உள்ளே புகுந்து அங்கே இருந்த பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், சிறுவர்கள் என்று பாராமல் கண்மூடித்தனமாக அடித்து தாக்கியுள்ளனர்.ஒரு சில பெண்கள் குளித்துக் கொண்டு இருந்த சூழலில் அவர்களையும் வெளியே இழுத்து வந்து அடித்துள்ளனர். ஒரு பெண் தன் குழந்தைக்கு பாலூட்டி கொண்டிருந்த சூழலில் அப் பெண்ணையும் தகாத வார்த்தைகளால் திட்டி காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.
பெண்களின் மண்டையை கட்டையால் அடித்து உடைத்துள்ளனர். கலவரத்தில் ஈடுபடாத இளைஞர்களையும் காவல்துறை தாக்கி அழைத்துச் சென்று பொய் வழக்கு பதிவு செய்துள்ளது. இப்பிரச்சினை பொறுத்தவரை கடந்த ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவின் போதே,தலித் மக்கள் வழிபாட்டு உரிமை கோரி போராடியுள்ளனர். அப்போதும் தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை அங்குள்ள வன்னியர் சமூக மக்கள் தடுத்துள்ளனர்.தீவிட்டிபட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் என்பது முழுக்க, முழுக்க இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும்.
கடந்த ஆண்டே தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்த நபர்களை கண்டறிந்து சேலம் மாவட்டம் நிர்வாகமும், காவல்துறையும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால்,அவர்களை கைது செய்திருந்தால் தற்போது இது போன்ற பிரச்சனை நடந்திருக்காது. இந்த ஆண்டு இது போன்ற பிரச்சனை நடப்பதை முன்கூட்டியே தெரிந்த தீவிட்டிப்பட்டி காவல்துறை வழிபாட்டு உரிமை தடுத்த நபர்களை உடனே கைது செய்து இருந்தால் இவ்வளவு பெரிய கலவரம் ஏற்பட்டு இருக்காது.
வழிபாட்டு உரிமை என்பது அனைவருக்குமான சம உரிமை ஆகும். அப்படிப்பட்ட சம உரிமையை,சம நீதியை தலித் மக்கள் பெறுவதற்கு அரசும் காவல் துறையும் இரு தரப்பு மக்களை முறையாக அழைத்து பேசி உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
தலித் சமூக மக்கள் கோவில் சென்று வழிபடுவதை தடுக்கின்ற நபர்கள் யாராக இருந்தாலும், அது எப்படிப்பட்ட அதிகாரம் மிக்கவர்களாக இருந்தாலும் அவர்களை உடனே கண்டறிந்து அவர்களை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட சாதிய ஆதிக்க வெறி கொண்ட நபர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். தற்போது தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்து, கலவரம் ஏற்பட காரணமான நபர்களை கண்டறிந்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறை படுத்த வேண்டும்.
மேலும் அப்பகுதியில் வசிக்கின்ற தலித் மக்களுக்கும்,தலித் மக்களின் குடியிருப்புகளுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் அரசு உரிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும்.தற்போது அங்கு நடந்த கலவரத்தில் தவறு செய்யாத தலித் இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது.அவர்ளை உடனே விடுதலை செய்ய வேண்டும்.தலித் பெண்களையும், சிறுவர்களையும், தவறு செய்யாத ஆண்களையும் தாக்கிய காவல்துறையினரை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த விஷயத்தில் காவல்துறை நடுநிலையோடு செயல்பட்டு இருக்க வேண்டும். இதற்கு மேலாவது இந்த விவகாரத்தில் சேலம் மாவட்ட காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
மேலும் இந்த சாதிய பிரச்சனைக்கு முடிவு கட்ட தீவிட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலின் அர்ச்சகராக தலித் சமூகத்தைச் சார்ந்தவரை நியமனம் செய்ய தமிழக அரசும், இந்து அறநிலையத்துறையும் முன்வர வேண்டும்.அவ்வாறு செய்யும்போது சமத்துவமும்,சமூக நீதியும் நிலைநாட்டப்பட்டு தந்தை பெரியாரின் கனவு நிறைவேறும்.
நாடெங்கிலும் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போதும் தலித் மக்கள் வழிபாட்டு உரிமையை கேட்டு போராடுகின்ற அவளை சூழல் தான் உள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசும்,தேசிய எஸ்சி.எஸ்டி ஆணையமும்,மாநில ஆதிதிராவிடர் ஆணையமும்,மாநில மனித உரிமை ஆணையமும்,மாநில மகளிர் ஆணையமும், நீதிமன்றமும் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீவிட்டிபட்டி பகுதிற்கு நேரடியாக வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுத்து தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை பேணி காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீவிட்டிபட்டி ஊர் பொதுமக்கள் சார்பிலும் அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பிலும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில தலைவர் சேலம் ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
0 coment rios: