ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஸ்ரீ பெரும்புதூர் எம்எல்ஏவுமான கு.செல்வப்பெருந்தகை பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவே அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தோற்று விடுவார் என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்ததின் அடிப்படையில் எப்படியாவது மீண்டும் பிரதமர் ஆகிவிட வேண்டும் என்பதற்காக அவர் பல்வேறு பொய்களை கூறி வருகிறார். இந்துக்கள் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த மதத்தினரும் மோடியை விரும்பவில்லை. எனவே அவர் தோற்பது உறுதி என்றார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 2026ல் திமுகவுடன் கூட்டணி குறித்து காலம் தான் முடிவு செய்யும். கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தகுந்த நேரத்தில் முடிவெடுக்கும். தொடர்ந்து, ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி, காங்கிரஸ் காமராஜர் ஆட்சி, சீமான் தீவிரவாத ஆட்சி, கம்யூனிஸ்ட்கள் தத்துவார்த்த ஆட்சி என அவர் அவர்களுக்கு ஏற்ற ஆட்சியை நடத்தி வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் காமராஜர் ஆட்சி என சொல்லுவதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது. சவுக்கு சங்கர் விவகாரத்தில் மனித உரிமைகள் மீறக்கூடாது கூறுகிறோம் என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட துணை தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, ஜாபர் சாதிக், மாநில செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், மாநகர பொறுப்பாளர் திருச்செல்வம், செயலாளர் குளம் ராஜேந்திரன், மண்டலத் தலைவர் விஜயபாஸ்கர், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன், சிறுபான்மையினர் துறை துணைத் தலைவர் கே.என்.பாட்ஷா, ஊடகப்பிரிவு தலைவர் முகமது அர்சத் மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: