ஈரோடு மாவட்டம் கோபி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பிரம்மாண்டமாக சி.எஸ்.சுப்பிரமணியம் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கின் திறப்பு விழா நிகழ்ச்சி வரும் 27ம் தேதி நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை கோபி நகர பொதுமக்களுக்கு நேரில் வழங்கும் பணியில் அக்கட்சியின் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி குறித்த பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக கோபிசெட்டிபாளையம் கட்சி அலுவலகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வந்திருந்தார். அப்போது, அவர் அங்கிருந்த கட்சி தொண்டர்களுக்கு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை வழங்கினார் .
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, குற்றாலத்தில் உள்ள பிரதான நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சில இடங்களை வனத்துறை வசம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிடுவதுடன், ஏற்கனவே வனத்துறையினரின் வசம் உள்ள பகுதிகளை திரும்ப பெற்று சுற்றுலா பயணிகள் எளிமையாக சென்று வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக வனப்பகுதியில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள யானை வழித்தடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு, அப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்காத வகையில் நேரடியாக அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு யானை வழித்தடம் குறித்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
தமிழக அரசின் அனுமதியையும் கருத்துகளை பெறாமல் சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் முடிவு கண்டனத்திற்குரியது. தமிழக மக்களின் நலன் கருதி சிலந்தி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்டும் திட்டம் குறித்து தமிழக முதல்வர் தோழமையுணர்வுடன் கேரளா அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தை கேரளா முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும். மேலும், அணை ட்டும் திட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
0 coment rios: