கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி 4ஆவது வார்டுக்கு உட்பட்ட கந்தாம்பாளையம் புதூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதற்கு போதிய சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் ஊரில் ஓடும் அத்தனை கழிவுநீரும் ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது. இந்த கழிவு நீர் வெளியேற போதுமான வடிகால் வசதிகளை செய்ய இடம் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் பெருகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த கழிவு நீர் 3 நாட்களுக்கு ஒரு முறை பேரூராட்சி நிர்வாகத்தின் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் மூலமாக உறிஞ்சி எடுத்து செல்லப்படுகிறது. கடந்த பல நாட்களாக பேரூராட்சி நிர்வாகத்தின் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வராததால் அதிக அளவிலான கழிவு நீர் தேங்கி நின்றது. பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் கொடுத்தும் அவர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த கந்தாம்பாளையம் புதூர் கிராம மக்கள் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் தெய்வராணி கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், தற்போது கழிவு நீர் தேங்கி நிற்கும் பகுதிக்கு அருகில் சுமார் 10 சென்ட் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடத்தை அளந்து புறம்போக்கு நிலத்தை மீட்டு அங்கு கழிவு நீர் தொட்டி கட்டி கொடுத்தால் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
இதேபோல ஊரின் தொடக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியிலும் கழிவுநீர் செல்வதற்கு போதுமான சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை இதன் காரணமாக ஊரை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இங்குள்ள கோயிலை சுற்றிலும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே இதனை சீரமைக்க கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
0 coment rios: