புதன், 12 ஜூன், 2024

பெருந்துறை அருகே 10.5 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதிக்கு ஒடிசாவிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், ஈரோடு ரயில் நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சண்முகம், காவல் ஆய்வாளர் சரஸ்வதி, காவல் உதவி ஆய்வாளர் குகனேஸ்வரன் மற்றும் போலீசார் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்த ரயில் மதியம் 12 மணி அளவில் ஈரோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ஆனால் சந்தேகப்படும் அந்த நபர் போலீசாரின் கைகளில் பிடிபடாமல் தப்பி சென்று விட்டார். இதையடுத்து அந்த நபரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த நபர் பெருந்துறை சிப்காட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர், பெருந்துறை சிப்காட் பகுதியில் மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அந்த நபர் தங்கி இருந்த அறையை சோதனை செய்த போது ரூ.3 லட்சம் மதிப்புள்ள 10.5 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.

இதையடுத்து, போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஒடிசா மாநிலம், ஜகத்சிங்ப்பூர் அருகே பதேனிக்கன் பலாசா பகுதியைச் சேர்ந்த பிசித்ரானந்த் சாகு மகன் சுஷாந்தகுமார் சாகு (வயது 32) என்பதும், இவர் ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து பெருந்துறை சிப்காட் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும், அவர் பெருந்துறை, பணிக்கம்பாளையம், கிருஷ்ணாம்பாளையம், சத்திரம் புதூர், காட பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் தங்கியுள்ள வட மாநில விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சுஷாந்தகுமார் சாகுவை கைது செய்த மதுவிலக்கு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: