புதன், 12 ஜூன், 2024

ஈரோடு அரசு மருத்துவமனையில் இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்: ஒருவர் பணியிட மாற்றம்

ஈரோடு பெரியவலசு பகுதியைச் சேர்ந்தவர் சொர்ணா (வயது 75). இவருக்கு கடந்த மே மாதம் 27ம் தேதி காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தாய் சொர்ணவை அவரது மகள் வளர்மதி, ஆட்டோ மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்.
அப்போது, அவரச சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவர் எக்ஸ்ரே எடுத்து வரும்படி கூறியுள்ளார். வளர்மதி தனது தாய் சொர்ணவை எக்ஸ்ரே பிரிவுக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தார். இதனையடுத்து, சொர்ணாவுக்கு காலில் வலி ஏற்பட்டது.

இதனால், அங்கு தூக்கு படுக்கையுடன் வந்த பணியாளரிடம் தனது தாயை தூக்கு படுக்கையில் வைத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லும்படி கேட்டுள்ளார். அதற்கு அந்த பணியாளர் மறுத்து விட்ட நிலையில், வளர்மதி தனது தாயை கையில் தூக்கி கொண்டு மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். 

இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் நோட்டீஸ் வழங்கினார்.

மேலும், இதுதொடர்பாக மருத்துவ அதிகாரிகள், மருத்துவமனை பணியாளர்கள், தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்கள் ஆகியோரிடமும், தாயை சுமந்து சென்ற வளர்மதியிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி, அறிக்கை பெறப்பட்டது.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் அன்றைய தினம் பணியில் இருந்த மருத்துவமனை பணியாளர் பிரகாஷ் மற்றும் முத்துசாமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யவும், அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்த பணியாளர் மைதிலி பவானி அரசு தலைமை மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்வதற்கும் ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அம்பிகா சண்முகம், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: