தற்போது தேர்தல் நடந்து முடிந்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இன்று (ஜூன்.10) திங்கட்கிழமை ஈரோடு அலுவலகத்தில் 2 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 215 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் தாட்கோ மூலம் ஒரு தற்காலிக துப்புரவு பணியாளரின் வாரிசுதாரருக்கு இறப்பு மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவியாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையினையும், 2 துப்புரவு பணியாளர்களுக்கு மகப்பேறு நிதியுதவியாக தலா ரூ. 6 ஆயிரத்துக்கான காசோலைகளையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பெருந்துறை அரசு மாதிரி பள்ளியைச் சேர்ந்த மாணவன் தமிழ் வழியில் பயின்று நீட் தேர்வு 2024-ல் 39 மாவட்ட அரசு மாதிரிப்பள்ளிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றதைப் பாராட்டி நற்சான்றிதழை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பிரேமலதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராஜகோபால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட மேலாளர் அர்ஜூன், உதவி ஆணையர் (கலால்) ஜீவரேகா உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: