ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் தலமலை ஊராட்சிக்கு உட்பட்ட தடசலட்டி, இட்டரை மற்றும் மாவநத்தம் ஆகிய மலைக்கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில், கடந்த மாதம் 24ம் தேதி மாவநத்தம் கிராமத்தில் மாரம்மா (வயது 40), தடசலட்டி கிராமத்தில் கவுரியம்மாள் (வயது 65), ரங்கன் (வயது 75), மாதி (வயது 85) ஆகிய 4 பேர் திடீரென வாந்தி, பேதியால் உயிரிழந்தனர்.
அதைத் தொடந்து கடந்த 5ம் தேதி மாரே (வயது 67), என்பவரும், இட்டரை கிராமத்தில் நேற்று கேலன் (வயது 60) என்பவரும் உயிரிழந்தார். தொடர்ந்து, 13 நாட்களில் 6 பேர் உயிரிழந்ததால் மலைக்கிராம மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று மருத்துவக்குழுவினர் பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களை வீடுகளுக்கே தேடிச்சென்று பார்த்து சிகிச்சை அளித்தனர். அப்போது உணவு பாதுகாப்புத் துறை, வருவாய்த் துறை மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
இதில், மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் குளோரின் கலந்துள்ள குடிநீரை பயன்படுத்துவதன் மூலமும், குட்டை நீரை குடிநீராக குடித்ததாலும் வாந்தி, பேதி ஏற்பட்டு 6 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.
இதனிடையில், தடசலட்டி கிராமத்தை சேர்ந்த நீலி மற்றும் அவரது கணவர் பாலன் ஆகியோர் உடல்நிலை சரியில்லாததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், இட்டரை கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்பவர் சத்தியமங்கலம் தனியார் மருத்துவ மனையிலும், லட்சுமி என்பவர் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
தாளவாடி மலைக் கிராமத்தில் குட்டை நீரை குடிநீராக பயன்படுத்தியதால் வாந்தி , பேதி ஏற்பட்டு 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், 6 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 coment rios: