புதன், 19 ஜூன், 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில்: கொடுமுடி வட்டத்தில் ஆட்சியர் கள ஆய்வு

தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடுமுடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (19ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார். 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.


அந்த வகையில், இன்று (19ம் தேதி) ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடுமுடி வட்டம் தாமரைபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ பிரிவு, தடுப்பூசி பிரிவு, உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், நாள்தோறும் எவ்வளவு நபர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர் எனக் கேட்டறிந்து, மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் காலாவதி நாள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, சிகிச்சைக்காக அங்கு வந்திருந்த புற நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, சிவகிரி தேர்வுநிலை பேரூராட்சி, அம்மன் கோவில் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, சிவகிரி தொடக்க வேளாண்மை கடன் சங்கம், அம்மன் கோவில் நியாய விலை கடையில் பயோமெட்ரிக் கருவியினை ஆய்வு செய்து, அத்தியாவசிய பொருட்கள் இருப்பு, மேலும் எவ்வளவு குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கியுள்ளனர் என கடை விற்பனையாளரிடம் கேட்டறிந்தார்.


பின்னர், சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறித்தும், மேலும், பள்ளியில் ஆசிரியர் பொருளாதாரம் குறித்து வகுப்பு எடுத்ததை பார்வையிட்டு, மாணவர்களிடம் கல்வித்திறன் மற்றும் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளியில் உள்ள கழிவறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கொடுமுடி அண்ணாதெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவு குறித்து கேட்டிருந்தார். மேலும் குழந்தைகளின் இந்த மாதம் தலைப்பான என்னைப் பற்றி என்பது குறித்து, குழந்தைகளிடம் விளக்கம் கேட்டறிந்தார். மேலும், குழந்தைகளின் உயரம் எடை ஆகியவற்றை அளவீட்டு முறைப்படி ஆய்வு செய்தார்.

இதனையடுத்து, ஊஞ்சலூர் மற்றும் கொளாநல்லி உப கிளை வாய்க்காலின் மதகு மறுசீரமைப்பு பணியினையும், மலையம்பாளையம் காவல் நிலையத்தினையும், ஈரோடு -கரூர் சாலையில் 2.7 கி.மீ நீளத்திற்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் சாலைப்புதூர் முதல் நொய்யல் வரை 2 வழிச்சாலை 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணியினையும், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, உதவி கோட்ட பொறியாளர் கதிரேசன், செயற்பொறியாளர் திருமூர்த்தி. உதவிப் பொறியாளர் உதயகுமார், கொடுமுடி வட்டாட்சியர் பாலகுமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உகியோர் உடனிருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: