ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் , தாராபுரம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்குகள் உள்ளனர்.
திமுக சார்பில் கே.இ.பிரகாஷ், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார், பா.ஜனதா கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் கார்மேகன் உள்பட 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. குமாரபாளையம் தொகுதியில் 74.06 சதவீதம், ஈரோடு கிழக்கு 66.05 சதவீதம், ஈரோடு மேற்கு 65.72 சதவீதம், மொடக்குறிச்சி 76.27 சதவீதம், தாராபுரம் 70.74 சதவீதம், காங்கேயம் 71.67 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மொத்தமாக 70.59 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
கண்காணிப்பு கேமரா பழுது
வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சித்தோடு அருகேயுள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு, தொகுதி வாரியாக 'ஸ்டிராங்' ரூம் எனப்படும் இருப்பாறையில் வைக்கப்பட்டன.
கல்லூரி முழுவதும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 28ம் தேதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில் கண்காணிப்பு கேமரா பழுதாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
84 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை:-
இந்நிலையில், இன்று (ஜூன்.4) செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதன்படி 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கைக்காக தலா 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. தபால் வாக்குகள் எண்ணிக்கைக்கு தனியாக தலா ஒரு மேஜை போடப்பட்டு உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்கு எண்ணிக்கைக்கு மொத்தம் 84 மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
குமாரபாளையம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிகளில் தலா 20 சுற்றும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி 17 சுற்றும், ஈரோடு மேற்கு, தாராபுரம், காங்கயம் சட்டமன்றத் தொகுதிகளில் 22 சுற்றிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணும் மையத்தில் தடையில்லா மின்சார வசதி, உணவுக் கூடம், அந்தந்த தொகுதிக்கான எண்ணிக்கை மையத்துக்கு மட்டும் செல்லும் வகையில் தடுப்பு வழி என அனைத்து கட்டமைப்பு பணிகளும் செய்யப்பட்டுள்ளன. சுற்று வாரியாக ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதற்கு அந்தந்த சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அறையில் தகவல் பலகை பொருத்தப்பட்டுள்ளது.
11 மணிக்கு முன்னணி நிலவரம்
சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதைத்தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. காலை 11 மணிக்கு மேல் தொகுதியில் வெற்றி பெற்றவர்களின் முன்னணி நிலவரம் தெரியவரும்.
வாக்கு எண்ணிக்கை புகார்
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வாக்கு எண்ணுதல் தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 என்ற எண்ணிலும், குமாரபாளையம், ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணியின் மேற்பார்வையாளர் ராஜீவ் ரஞ்ஜன் மீனாவை 9894421231 என்ற எண்ணிலும், மொடக்குறிச்சி, காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணியின் காயத்ரி என் நாயக்கை 9965561717 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
0 coment rios: