திங்கள், 3 ஜூன், 2024

நாளை வாக்கு எண்ணிக்கை: ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர், மேற்பார்வையாளர் ஆய்வு

நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன்.4) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா மற்றும் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணி மேற்பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.


இந்த ஆய்வின்போது, சித்தோடு ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகள் குறித்தும், 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பிடம், வாகனம் நிறுத்துமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டள்ளதையும், தபால் வாக்கு எண்ணும் அறையினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 14 மேசைகள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 84 மேசைகளில் வாக்குகள் எண்ணப்படவுள்ளது. வாக்கு எண்ணும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள 84 வாக்கு எண்ணும் மேசை கண்காணிப்பாளர்கள், 84 உதவியாளர்கள், 84 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20 சதவீதம் கூடுதலாக தலா 3 வாக்கு எண்ணும் மேசை கண்காணிப்பாளர்கள், தலா 3 உதவியாளர்கள், தலா 3 நுண்பார்வையாளர்கள் என 54 பணியாளர்கள் ஆகியோருக்கும் வாக்கு எண்ணும் பணிக்கான பயிற்சிகள் இன்று (ஜூன்.3) வழங்கப்பட்டது.


வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில், வாக்கு எண்ணும் பணிக்கான எழுது பொருட்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவியின் (சுற்றுவாரியாக) வரிசை எண்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தபால் வாக்கு எண்ணிக்கைக்கான மேஜை உட்பட ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான பயிற்சி, தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில், குமாரபாளையம், ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணி மேற்பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா மற்றும் மொடக்குறிச்சி, தாராபுரம் மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணி மேற்பார்வையாளர் காயத்ரி என் நாயக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுநாதன் (தேர்தல்), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: