புதன், 12 ஜூன், 2024

ஈரோட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் நாள் உலக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி அனைத்து பள்ளிகள், அலுவலகங்கள், அரசு துறைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களிலும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன் என அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கத்தை கையொப்பமிட்டு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார். மேலும், மற்றும் வாகனங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு வாசகம் அடங்கிய ஒட்டுவில்லைகளையும் (ஸ்டிக்கர்) வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

குழந்தைத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986, 01.09.2016 முதல் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும், 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இச்சட்ட விதிகளை மீறுவோருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது ஆறு மாதம் முதல் இரண்டாண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். இரண்டாம்முறையாக இச்சட்ட விதிகளை மீறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட குழந்தைத் தொழிலாளரின் பெற்றோர்களுக்கும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். குழந்தைத் தொழிலாளர்களை அனைத்து பணிகளிலும், வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளிலும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் www.pencil.gov.in என்ற இணையதளத்திலும், கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800 4252 650 மற்றும் 155214 ஆகிய எண்களிலும் புகார் அளிக்கலாம்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குநர் வினோத்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முகம்மது குதுரத்துல்லா (பொது), பிரேமலதா (நிலம்), தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சுப்பிரமணியம், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: