ஈரோட்டில் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவரான ஜெ.சுத்தானந்தன் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்று (25ம் தேதி) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்ட தென்னிந்திய மகாஜன சங்கத்தின் சார்பில் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சுத்தானந்தன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு தென்னிந்திய மகாஜன சங்கத்தின் மாவட்ட தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். தென்னிந்திய மகாஜன சங்கத்தின் மாவட்ட செயலாளரும், ஜேஎஸ் இளைஞர் படையின் மாவட்ட தலைவருமான ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார். செங்குந்தர் கல்வி கழக செயலாளர் சிவானந்தம், செங்குந்தர் நர்சரி பள்ளி தாளாளர் வேலு, செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், இளைஞரணியினர், மகளிரணியினர் என பலர் திரளாக கலந்து கொண்டு சுத்தானந்தன் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினா்.
பின்னர், இதுகுறித்து மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி கூறுகையில், மறைந்த ஜெ.சுத்தனாந்தன், 22 ஆண்டுகளாக தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில தலைவராக பதவி வகித்தவர். கைத்தறித்துறையில் 1967-1975ம் ஆண்டு வரை இயக்குநராகவும், 1975-1989 மற்றும் 1995-1996ம் ஆண்டு வரை தலைவர் பொறுப்பு வகித்தவர். தமிழகத்தின் முதல் கூட்டுறவு நூற்பாலையான திருநெல்வேலி தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலையில் 1979-1989ம் ஆண்டு வரை இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
இவர், ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் துவக்கி, அந்த நிறுவனங்களின் தாளாளராக பணியாற்றியவர். இவரது சேவைகளை பாராட்டி உத்யோக ரத்தன் விருது ஜனாதிபதியால் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவு நாளில் அவர் வழியில், சேவை மனப்பான்மையுடன் நாங்கள் பயணிப்போம் என உறுதி மொழி ஏற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
0 coment rios: