ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஈங்கூர் பகுதியில் வசித்து வருபவர் சைலேந்திர குமார். இவரது மனைவி கார்கில் குமாரி (வயது 20). நிறைமாத கர்ப்பிணியான கார்கில் குமாரிக்கு நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.
இதனையடுத்து, அவரது கணவர் சைலேந்திர குமார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கணபதி மற்றும் அவசர கால மருத்துவ நுட்புணர் சுரேந்திரன் ஆகியோர் கார்கில் குமாரியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அப்போது, 108 ஆம்புலன்ஸ் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நோக்கி செல்லும் வழியில் வேட்டுவப்பாளையம் என்ற இடத்தில் ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது. இதற்கு, உறுதுணையாக இருந்து ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு குழந்தையைக் காப்பாற்றினர்.
தற்பொழுது, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாயும் சேயும் நலமுடன் இருந்து வருகின்றனர். சாதுரியமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கணபதி மற்றும் மருத்துவ உதவியாளர் சுரேந்திரன் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் பாராட்டினார்.
0 coment rios: