கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து, அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று (28ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 81 ஆயிரத்து 676 கன அடியாக இருந்த நிலையில், இன்று (29ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 53 ஆயிரத்து 91 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 112.27 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 116.36 அடியாக உயர்ந்து, 117 அடியை நெருங்கி வருகிறது. அதேபோல், நீர்இருப்பு 87.78 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, இதேநிலை, நீடித்தால் இன்று மதியத்துக்கு மேட்டூர் அணை நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 coment rios: