செவ்வாய், 2 ஜூலை, 2024

2.5 கிலோ எடை கொண்ட மண்ணீரல் அகற்றி ஈரோடு ஜெம் மருத்துவமனை சாதனை

ஈரோடு ஜெம் மருத்துவமனையில் 36 கிலோ எடை கொண்ட இளம்பெண்ணின் உடலில் இருந்த 2.5 கிலோ எடை கொண்ட மண்ணீரல் அதிக ரத்த போக்கு இன்றி வெற்றிகரமாக அறுவை கிசிச்சை மூலம் அகற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கவுதமராஜ் (வயது 28). செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யோகாம்பாள் (வயது 28). செவிலியர். இவர்களுக்கு மூன்றரை வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். யோகாம்பாளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வயிற்றின் இடது பக்கம் கடும் வலி மற்றும் ரத்த சோகை பிரச்சனைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்து வந்தார்.


இருப்பினும் குணமாகவில்லை. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள காந்தி நகர் முத்துகருப்பண்ணன் வீதியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அப்போது, மருத்துவமனையின் குடல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எல்.சதீஷ்குமார், யோகாம்பாளை பரிசோதித்தார்.

அவருக்கு ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்யப்பட்டதில், யோகாம்பாளுக்கு மண்ணீரல் வீக்கத்தின் காரணமாக ரத்தத்தில் உள்ள சிவப்பணு மற்றும் தட்டணுக்கள் மிகவும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. யோகாம்பாளின் மண்ணீரலை அகற்றுவதன் மூலமாகவே அவரது நோயை சரி செய்ய முடியும் என்பதை தெரிவித்தனர்.

இதற்கு யோகாம்பாள் மற்றும் அவரது குடும்பத்தினர் உறுதி அளித்ததன்பேரில், கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி யோகாம்பாளுக்கு சுமார் இரண்டரை மணி நேர அறுவை சிகிச்சை செய்து, மண்ணீரல் அகற்றப்பட்டது. இதையடுத்து 4 நாள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த, யோகாம்பாள் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

இதுகுறித்து ஈரோடு ஜெம் மருத்துவமனையின் குடல் நோய் நிபுணர் டாக்டர் கே.எல்.சதீஷ்குமார் கூறியதாவது, 28 வயதுடைய 38 எடை கொண்ட இளம்பெண், கடும் வயிற்று வலி, ரத்த சோகையால் எங்களது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவரை பரிசோதித்தபோது, அவரது உடலில் சராசரி மனிதனின் உடலில் இருக்கும் மண்ணீரலை விட அதிக வீக்கத்துடன் இருந்தது.

அதாவது சராசரியாக 250 கிராம் எடையுடன் இருக்க வேண்டிய மண்ணீரல், இப்பெண்ணின் உடலில் 2.5 கிலோ எடையுடன் இருந்தது. மண்ணீரல் பணி என்பது உடலில் தேவையில்லாத ரத்த சிவப்பணுக்களை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதே ஆகும். அதேசில நேரத்தில் இதுபோல அதிக எடை அதிகமாகி பல்வேறு பிரச்சனையை கொடுக்கும்.

இதுபோல லட்சத்தில் 4 பேருக்கு தான் வரும். மண்ணீரல் இப்படி பலூன் போல வீக்கமாக இருந்தால், எதிர்பாரத விபத்து அல்லது கீழே விழும்போது அது உடைந்து அதிக ரத்த போக்கை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாகி விடும். இதனால், அப்பெண்ணிடமும், அவரது குடும்பத்தினரிடமும் மண்ணீரலின் வீக்கம் குறித்தும், அதனை அகற்றுவது மட்டுமே தீர்வு என எடுத்துக்கூறினோம்.

இதற்கு அவர்கள் ஒப்புதல் தெரிவித்ததன்பேரில், அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சையின்போது அதிக ரத்த போக்கினை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகள் செலுத்தி உடலை தயார் செய்தோம். மயக்கவியல் நிபுணரால் முழு மயக்க மருந்து செலுத்தப்பட்டு அதிக ரத்தப்போக்கு இன்றி இரண்டரை மணி நேரத்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து, 2.5 கிலோ எடை கொண்ட மண்ணீரல் அகற்றினோம்.

மண்ணீரல் செய்யும் பணியை பிற உறுப்புகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதால் இவருக்கு பிற தொந்தரவுகள் வராது. இருப்பினும், 5 வருடங்களுக்கு ஒரு முறை உரிய தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் எடுத்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என அறிவுறுத்தியுள்ளோம். இந்த அறுவை சிகிச்சையை குறைந்த கட்டணத்தில் செலுத்தி உள்ளோம். தற்போது, அப்பெண் குணமடைந்து, இயல்பாக பணிகளை செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

இளம்பெண்ணின் உடலில் 2.5 கிலோ எடை கொண்ட மண்ணீரலை அதிக ரத்தபோக்கு இன்றி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றிய டாக்டர் கே.எல். சதீஷ்குமார், மயக்கவியல் நிபுணர் டாக்டர் அனுஷா மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் குழுவினரை ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு மற்றும் நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன்ராஜ் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் ஜெம் மருத்துவமனை 10 ஆண்டுகளாக ஜீரண மண்டலம் மற்றும் லேப்ராஸ்கோப்பி சிறப்பு சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சைகள் அளித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்களது ஜெம் மருத்துவமனை கோவையை தலைமையிடமாக கொண்டு ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வருவதாக அம்மருத்துவமனையின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: