ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரிலும்,மாவட்ட நியமன அலுவலரின் அறிவுரையின் பேரிலும் பவானி ரோட்டில் உள்ள சன் பேக்கரி, குன்னத்தூர் ரோட்டில் உள்ள வந்தனம் பேக்கரி , பைபாஸ் ரோட்டில் உள்ள விநாயகா பேக்கரி மற்றும் அப்பகுதிகளில் உள்ள பானிபூரி கடைகள் மற்றும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் பெருந்துறை உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் பிரட் ,பன் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகள் தயாரிப்பு தேதி காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு ரூபாய் 1,000 மதிப்புள்ள 20 பிரட் பாக்கெட்டுகள் மற்றும் ரூபாய் 1,500 மதிப்புள்ள ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அழிக்கப்பட்டதுடன் பவானி ரோடு மற்றும் பைபாஸ் ரோட்டில் உள்ள பேக்கரிகளுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
குன்னத்தூர் ரோட்டில் உள்ள பேக்கரியில் ஃப்ரீசரில் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம்,பழங்கள், மசால் தடவிய கோழி இறைச்சி ,சாண்ட்விச் ,பர்கருக்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த சட்னி ,தக்காளி சாஸ், பொதுமக்களுக்கு விற்பனைக்காக வைத்திருந்த காலாவதியான பிரட் மற்றும் கோகோ மிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அழிக்கப்பட்டதுடன் ரூபாய் 3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் பேக் செய்யப்பட்ட பிரட், பன் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளில் தயாரிப்பு தேதி ,காலாவதி தேதி உள்ளிட்ட அனைத்து லேபிள் விவரங்களும் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.
பானி பூரி கடைகளில் பானிபூரி ரசத்தில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்து சுகாதாரமான முறையில் தரமான மூலப்பொருட்களை கொண்டு செயற்கை நிறம் சேர்க்காமல் பானி பூரி மற்றும் ரசம் தயாரித்து விற்பனை செய்யப்பட வேண்டும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை செய்து பொதுமக்களுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பானிபூரி ரசத்தில் உணவு மாதிரிகள் சேகரித்து உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் ஆய்வு செய்து சுகாதாரமான முறையில் செயற்கை நிறம் சேர்க்காமல் தினமும் புதிய உணவு எண்ணெய் வகைகள் பயன்படுத்தி வடை போண்டா மற்றும் பலகாரங்கள் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என எச்சரிக்கை செய்து உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் சாலையோர தள்ளுவண்டி கடைகளின் மூலம் உணவுப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கண்டிப்பாக உரிமம் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பவானி ரோட்டில் இருந்த ஒரு தள்ளுவண்டி கடையில் ஏற்கனவே பயன்படுத்திய உணவு எண்ணெயை மீண்டும் பயன்படுத்த வைத்திருந்தது கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதுடன் தினமும் புதிய உணவு எண்ணெய் வகைகளை பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை செய்யப்பட்டு எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களை செய்தித்தாள் மற்றும் தடை செய்யப்பட்ட பாலிதீன் கவரில் வைத்து வழங்காமல் சுத்தமான தட்டு மற்றும் வாழை இலையில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என எச்சரிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட நியமன அலுவலர்டாக்டர் தங்கவிக்னேஷ் கூறுகையில், ஈரோடு மாவட்டம் முழுவதும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தரம் குறைவான பானிபூரி மற்றும் இதர உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது குறித்து பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணை தொடர்பு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
0 coment rios: