செவ்வாய், 9 ஜூலை, 2024

அந்தியூர், டி.என்.பாளையம் வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அந்தியூர் மற்றும் டி.என்.பாளையம் வனச்சரகத்தின் வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களுக்குள் அடிக்கடி யானை, பன்றி மற்றும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், அங்குள்ள கால்நடைகளை வேட்டையாடுவதும் வழக்கமாக உள்ளது.

இவ்வாறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும், வன விலங்குகளை தடுக்கும் விதமாக வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களுக்குள் வன விலங்குகள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கையாக ஆங்காங்கே அகழி அமைத்தும் சில இடங்களில் குறைவழுத்த மின்வேலி அமைத்தும் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த பாதுகாப்பு அரண்களை கடந்து வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழைய முயற்சிக்கும் போது யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் உயிரிழக்க நேருகிறது. அவ்வாறு ஏற்படும் உயிரிழப்புகளுக்கு விவசாயிகளே பொறுப்பு என வனத்துறையினர் தன்னிச்சையாக முடிவெடுத்து சில விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

பட்டா நிலங்களுக்குள் நுழையும் வன விலங்குகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வனத்துறை ஏற்படுத்தியுள்ள தடுப்புகளில் சிக்கி உயிரிழக்கும் வனவிலங்குகளின் உயிரிழப்புகளுக்கு அப்பாவி விவசாயிகள் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதை கண்டித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கள்ளி்ப்பட்டி அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்தனர்.

இந்த அறிவிப்பின் படி, இன்று (9ம் தேதி) அந்தியூர் மற்றும் டி.என்.பாளையம் வனச்சரக எல்லையை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பொய்யான வழக்குகளை பதிவு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வனத்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் வனவிலங்குகள் நுழைவதை தடுத்து நிறுத்திட போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: