செவ்வாய், 9 ஜூலை, 2024

மொடக்குறிச்சி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (9ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், புஞ்சைகாளமங்கலம் ஊராட்சியில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கம் கீழ் திரு.அருள்சங்கர் என்பவர் ரூ.16.88 லட்சம் மானியத்தில், 4,000 ச.மீ. பரப்பளவில் பசுமை குடில் அமைக்கப்பட்டிருந்ததையும், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9 ஆயிரம் மானியத்தில் 1 ஹெக்டேர் பரப்பளவில், நிழற்கூரையில் வளர்க்கப்பட்டு வரும் துவரை நாற்றுகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கணபதிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் விபரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகள் இருப்பு உள்ளிட்டவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், சித்தமருத்துவ பிரிவில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கணபதிபாளையம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வருகை, எடை, உயரம், வழங்கப்படும் சத்துமாவு ஆகியவை குறித்து கேட்டறிந்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.


மேலும், கணபதிபாளையம் அரசு கால்நடை மருத்துவமனையினையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சின்னவெட்டிபாளையத்தில் மகாலட்சுமி மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.1 லட்சம் கடனுதவியில் நெய், டைல்ஸ் கிளீனர், மஞ்சள்தூள், சிகைக்காய் தூள், அரப்பு போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளதையும், அதே பகுதியில் செம்பருத்தி மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.2.5 லட்சம் கடனுதவியில் மண்பாண்ட தொழில் செய்து வருதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, அறச்சலூர் கொடுமுடி சாலை முதல் பச்சகவுண்டன்வலசு வழியாக வாங்கலாம்வலசு வரை ரூ.43.44 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை புதுப்பித்தல் பணி நடைபெற்று வருவதையும், வடுகபட்டி கிராமம், வாங்கலாம்வலசு, வரப்பருத்திகாடு கள்ளச்சாராயம் காய்ச்சி மனம் திருந்திய ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டிலான மாடு வழங்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும், அவல்பூந்துறை பேரூராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, உதவி இயக்குநர்கள் சிந்தியா (தோட்டக்கலைத்துறை), கலைச்செல்வி (வேளாண்மைத்துறை), கோட்ட கலால் அலுவலர் வீரலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகபிரியா, பிரேமதலா, அவல்பூந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் யவனராணி, கணபதிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர். শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: